நிலங்கள் ஒதுக்கீடு திட்டம் மறு ஆய்வு செய்யும்படி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ‘ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அரசு நிலங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பான, 1949ம் ஆண்டு திட்டத்தை, மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என, தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாழ்வாதாரத்துக்காக, விவசாயம் செய்ய, அரசு நிலம் வழங்கும் திட்டம், 1949ல் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 1967ம் ஆண்டு, முன்னாள் ராணுவ வீரரான மாதவனுக்கு, செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரில் 3.89 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில், 72 சென்ட் நிலத்தை வீட்டு மனைகளாக்க, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
எனவே, அந்த நிலத்துக்கு பட்டா கோரி, மாதவனின் மனைவி நளினிஸ்ரீ, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தனி நீதிபதி, பட்டா வழங்கும்படி, 2025ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில், ‘தாழம்பூர் பகுதியில், 583.20 ஏக்கர் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது. அதை விசாரிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம் தலைமையில், விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் விசாரணை அறிக்கை அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். எனவே, பட்டா வழங்கும்படி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று, கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர். ராஜேஷ் விவேகானந்தன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாழ்வாதாரத்துக்காக விவசாயம் செய்ய, அரசு நிலம் வழங்கும் திட்டம், 1949ல் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தின் அடிப்படையில், மனுதாரரின் கணவருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்வகை நிலங்களை வர்த்தக பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக் கூடாது.
அரசு நிலங்கள், பொதுமக்களுக்கு சொந்தமானவை. எனவே, அரசு நிலங்களை ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்காக ஒதுக்கும் போது, அவற்றை வர்த்தக பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவது, அந்த திட்டத்தின் நோக்கத்தை தோல்வியுறச் செய்து விடும். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அரசு நிலங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பான, 1949ம் ஆண்டு திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் .
தாழம்பூர் நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழு, தாக்கல் செய்யும் அறிக்கை அடிப்படையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரரின் நிலத்துக்கு பட்டா வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி