லீவு கேட்டு மன்றாடிய மாணவர்களுக்கு நெல்லை, குமரி கலெக்டர்கள் அட்வைஸ்

2

நாகர்கோவில்: ' மழையால் பள்ளிக்கு விடுமுறை வேண்டும்' என, சமூக வலைதளம் வாயிலாக மன்றாடிய மாணவர்களுக்கு, நெல்லை, குமரி கலெக்டர்கள் அளித்த அறிவுரையும், சுவாரஸ்ய பதிலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு லேசாக மழை பெய்தது. இதனால், பள்ளிக்கு விடுமுறை கிடைக்கும் என, மாணவர்கள் நேற்று எதிர்பார்த்தனர்.

இதற்கிடையில், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால், கலெக்டர் பிரதாப், இரவு, 10:00 மணிக்கு, சமூக வலைதளமான தன், 'இன்ஸ்டா' பக்கத்தில், 'குமரி மாவட்ட பள்ளிகளுக்கு, விடுமுறை அளிக்கப்படவில்லை; யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என, பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், சில மாணவர்கள், 'மழை பெய்து சேறும், சகதியுமாக உள்ளது; விடுமுறை அளியுங்கள்' என்றும், சிலர், 'மழை பெய்தபடி இருப்பதால், ஈரமான சீ ருடையுடன் பள்ளிக்கு செல்ல முடியாது.

எங்கள் நிலையை புரிந்து, விடுமுறை அளியுங்கள்; நீங்களும் பள்ளி பருவத்தை கடந்து தானே வந்திருப்பீர்கள்' என்றும், மற்றொரு மாணவன், 'இன்று எங்களுக்கு கணக்கு தேர்வு; பள்ளிக்கு விடுமுறை விடுங்கள்' எனவும் பதிவிட்டிருந்தனர்.

கலெக்டர் பிரதாப், இந்த பதிவுகளை பகிர்ந்து, 'வதந்திகளை நம்பாமல் பள்ளிக்கு செல்லுங்கள்' என, அறிவுரை கூறி பதிவிட்டார்.

அதேபோல, திருநெல்வேலி கலெக்டர் ஆனந்த்மோகனின், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்திலும், 'விடுமுறை விடாவிட்டால், நீங்கள் கலெக்டராக இருப்பதில் என்ன பயன்? ஐ.ஏ.எஸ்., ஆக நீங்க பெயிலாகிவிட்டீர்கள்?' என, கிண்டலாக மாணவர்கள் பதிவிட்டிருந்தனர்.

அதற்கு ஆனந்த்மோகன், 'இங்க சில பேரு, லீவு விடலன்னா கலெக்டரையே பெயில்னு, எமோஷனல் பிளாக்மெயில் பண்ணிட்டு இருக்கானுவ... உங்க கஷ்டம்லாம் புரியுது... இந்த ஓவரு 'ஆக்டிங்' தான்டா தாங்க முடியல.

கவலைப்படாதீங்க... நிஜமாவே கனமழை பெஞ்சா, நீங்க யாரும் கேக்காமலேயே லீவு வரும். உங்க பாதுகாப்புக்கு இந்த கலெக்டர் அங்கிள், எப்பவும் கேரண்டி' என, நெல்லை வட்டார பேச்சு வழக்கில், நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.

கலெக்டர்களின் இந்த சமூக வலைதள பதிவுகள் பரவி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

Advertisement