கல்பாத்தி கோவிலில் தேரோட்டம் மாயவரம் கோவிலுக்கு அழைப்பு

பாலக்காடு: பாலக்காடு கல்பாத்தியில் மாயவரம் முறைப்படி ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கும் கோவில் தேரோட்டம், மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊர்மக்களுக்கு கல்பாத்தி கோவில் நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி தேரோட்டத்தின் தோற்றுவாயாக மாயவரமும், அங்குள்ள மயூரநாத சுவாமி கோவிலும் உள்ளன. கல்பாத்தி அக்ரஹாரத்தில் குடியேறிய முன்னோர்கள், மாயவரம் உள்ளிட்ட தமிழக பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பது வரலாற்று ரீதியான தொடர்பு.

இதன் நினைவாக, இரு இடங்களிலும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான ஆகம மற்றும் பூஜை முறைகளுடன் தேரோட்ட விழாக்கள் நடத்தப்படுகின்றன.

இதற்காக, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி கோவில், புதிய கல்பாத்தி மந்தக்கரை மகாகணபதி கோவில், பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவில் மற்றும் சாத்தபுரம் பிரசன்ன மகாகணபதி கோவில் ஆகியவற்றின் நிர்வாகிகள், கிருஷ்ணா, முரளி ராமநாதன், வாசுதேவன் ஆகியோர் தலைமையில் பிரதிநிதிகள் குழுவினர், மாயவரம் சென்றனர்.

பாரம்பரிய பந்தத்தை போற்றும் விதமாக, மயூரநாத சுவாமி கோவிலை வணங்கி தேரோட்ட அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில், கூட்டு கல்பாத்தி தேரோட்ட பத்திரிகையுடன், சம்பந்தப்பட்ட உப கோவில்களின் திருவிழா அழைப்பிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த ஆண்டிற்கான கல்பாத்தி தேரோட்டம், நவ. 7 முதல் 17 வரை நடக்கிறது.

மயூரநாதர் கோவிலில் நடந்த பக்தர்கள் சந்திப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில், மயிலாடுதுறை நகராட்சி தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement