மகேஷ் முன்ஜாமின் மனு தள்ளுபடி ஏன்?

மகேஷன் முன்ஜாமின் மனு தள்ளுபடி என்ற செய்திக்கு பதிலாக இதைச் சேர்க்கலாம்.

சென்னை: ‘கட்சி நிதி என்ற பெயரில் பெரியளவில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில், அந்த தொகை யாரைச் சென்றடைந்தது என்பதை மகேஷிடம் விசாரிக்காமல் கண்டறிய முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, 100 கோடி ரூபாய் லஞ்சமாக வசூலித்தது தொடர்பாக பதிவான வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் தள்ளுபடி செய்தார். அவரது உத்தரவு விபரம்:

தனியார் பள்ளிகள் நிர்வாகத்திடம் இருந்து, ‘கட்சி நிதி’ என்ற பெயரில் பணம் வசூலித்த விவகாரத்தில், மனுதாரர் நேரடியாக சாட்சிகளிடம் கலந்துரையாடி உள்ளார் என, காவல் துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 177 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ள வழக்கில், முக்கிய குற்றவாளியான முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார் தலைமறைவாக உள்ளார். அவரது உறவினர்கள், காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் இருந்து, அவர் மகேஷின் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வருகிறது. இது, விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

முத்துகுமாரை, மகேஷ் பாதுகாக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கும், முன்ஜாமின் என்ற சுதந்திரத்தை பயன்படுத்தி, சாட்சிகளை, புலன் விசாரணையை குலைக்கக்கூடும் என்ற சந்தேகத்துக்கும் முகாந்திரம் உள்ளது. ஊழல் என்பது மிகப்பெரிய பொருளாதார குற்றம். இந்த வழக்கில், மனுதாரர் மகேஷுக்கு முன்ஜாமின் வழங்கினால், புலன் விசாரணை முடங்கி விடும்.

தலைமறைவாக உள்ள முத்துகுமாரை கைது செய்யும் முன், மகேஷுக்கு முன்ஜாமின் வழங்கினால், அது முத்துகுமார் புலன் விசாரணையை தவிர்க்க காரணமாகி விடும். கட்சி நிதி என்ற பெயரில், பெரிய அளவில் பணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில், அந்த தொகை யாரை சென்றடைந்தது என்பதை மகேஷை விசாரிக்காமல் கண்டறிய முடியாது.

மகேஷ் சாதாரண நபர் அல்ல; உயர்ந்த பதவியை வகித்தவர்; அரசியல் செல்வாக்கு மிக்கவர். புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாலும், புதிய தகவல்கள் கண்டறியப்பட்டு உள்ளதாலும் முன்ஜாமின் வழங்க முடியாது. முன்ஜாமின் கேட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement