கரும்பு விவசாயிகளை அரவணைத்து செல்லுங்கள் ஆலை உரிமையாளர்களுக்கு சிவகுமார் அறிவுரை

பெலகாவி: ‘‘கரும்பு விவசாயிகளை அரவணைத்து செல்லுங்கள்,’’ என, சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கு முதல்வர் சிவகுமார் அறிவுரை கூறினார்.

மத்திய அரசு 2026 – 2027ம் பருவத்திற்காக கரும்பு 1 டன்னுக்கு, 3,650 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளது. ஆனாலும் சர்க்கரை ஆலைகள் மூலம் 1 டன்னுக்கு 4,500 ரூபாய் மற்றும் அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக 1,000 ரூபாய் சேர்த்து 5,500 ரூபாய் வழங்க வேண்டும் என்று, கர்நாடகாவின் வடமாவட்ட கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி போராட்டத்திலும் குதித்துள்ளனர். இந்நிலையில் பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலை உரிமையாளர்களுடன் முதல்வர் சிவகுமார் நேற்று தனித்தனியாக ஆலோசனை நடத்தி குறைகளை கேட்டறிந்தார்.

* சலுகை வேண்டும்

சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் பலர் பேசுகையில், ‘சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலையை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும். சர்க்கரை விலை உயர்ந்தால் மட்டுமே, கரும்பு விவசாயிகள் கேட்கும் தொகையை தங்களால் வழங்க முடியும். மின் கட்டண நிலுவை தொகை, பயன்பாட்டு வரிகளில் மாநில அரசு எங்களுக்கு சலுகை அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு பிரச்னை இருப்பது போன்று, ஆலை உரிமையாளர்களும் பல பிரச்னைகளை சந்திக்கிறோம்’ என்றனர்.

விவசாய பிரதிநிதிகள் கூறுகையில், ‘சர்க்கரை விலை உயர்ந்தால் தான் கூடுதல் விலை தர முடியும் என்று, ஆலை உரிமையாளர்கள் கூறுவதை ஏற்க முடியாது. அவர்கள் எத்தனால், பிற துணை தயாரிப்புகள் மூலம் லாபம் ஈட்டுகின்றனர். அந்த லாபத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்வது இல்லை. கரும்புகளை எடை போடுவதில் முறைகேடு நடக்கிறது. இந்த விஷயத்தில் வெளிப்படை தன்மை இல்லை. அரசு தலையிட்டு கண்காணிக்க வேண்டும்’ என்றனர்.

* நாட்டு பிரச்னை

இருதரப்பு கருத்துகளை கேட்ட பின், முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

இந்த பருவத்திற்காக நிர்ணயித்துள்ள கரும்பின் விலையை அதிகரிக்க மத்திய அரசிடம் கேட்போம். மத்திய உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நமது மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு அழுத்தம் தருவோம்.

இங்குள்ள நிலைமை அவருக்கு நன்கு தெரியும். கடந்த முறை நடந்த போராட்டத்தின் போது, டிராக்டர்களுக்கு தீ வைக்கப்பட்டது. இம்முறை அதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது. அரசு யார் பக்கமும் இல்லை. கரும்பு விவசாயிகள் போராட்டம் நமது மாநில பிரச்னை மட்டுமல்ல; நாட்டின் பிரச்னை.

* அரசின் பொறுப்பு

சர்க்கரை ஆலை உரிமையாளர்கள், விவசாயிகள் நம்பிக்கையை பெற வேண்டும். அவர்களை கோபப்படுத்தி பார்க்காதீர்கள். சித்தராமையா முதல்வராக இருந்தபோது, விவசாயிகளுக்கு சிறப்பு தொகை வழங்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் சில ஆலை உரிமையாளர்கள் ஏற்று கொள்ளவில்லை. விவசாயிகள், ஆலை உரிமையாளர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உரியது.

சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கும் பல பிரச்னைகள் உள்ளன. அதை சரிசெய்ய என்னால் மட்டும் தனியாக முடிவு எடுக்க முடியாது. அதனால் தான் உங்கள் அனைவரிடமும் ஆலோசித்தேன். மஹாராஷ்டிரா முதல்வரும் கரும்பு விவசாயிகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற முடிவில் உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாக்ஸ்கள்

விவசாயிகள் மோதல்

விவசாயிகள் சங்கத்தின் ஒரு பிரிவு, 1 டன் கரும்புக்கு 4,500 ரூபாய் ஆதரவு விலை தந்தால் ஒப்பு கொள்வோம் என்றது. ஆனால் இன்னொரு பிரிவு 5,500 ரூபாய் கேட்போம் என்று கூறியதால், சுவர்ண விதான் சவுதாவுக்குள் வைத்தே இரு பிரிவு விவசாயிகள் இடையில் மோதல் ஏற்பட்டது. நாற்காலிகளை துாக்கி வீசினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, சில விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனை கண்டித்து சுவர்ண விதான் சவுதா முன்பாக செல்லும் புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், 1 கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement