அறநிலையத்துறையில் பணியிட மாற்றம்: இணைக் கமிஷனர்கள் கடும் அதிருப்தி
- நமது நிருபர் -
அறநிலையத்துறையில் நிர்வாக நலன் கருதி என சமீபத்தில், 18 இணைக் கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், பொதுத் தேர்வு எழுதவுள்ள குழந்தைகளின் பெற்றோர், குற்றச்சாட்டுக்கு ஆளாகாத பெண் அதிகாரிகள் என பலர் மாற்றப்பட்டுள்ளதால், அவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திராவிட ஆட்சியில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் இணைக் கமிஷனர்கள், அதிகாரிகள் பெரும்பாலும் ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டனர். இதனால் கோவில் நிலங்கள், கடைகளின் வாடகையை நிர்ணயிப்பதிலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்கப்பட்டன. கோவில் மரபுகள், அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பூஜாரிகளின் உரிமைகளில் அதிகாரிகள் அதிகளவில் தலையிட்டனர்.
இவையெல்லாம் பெரும்பாலான இணைக் கமிஷனர்கள் விருப்பப்பட்டு செய்யவில்லை. ஆட்சியாளர்களின் உத்தரவு மற்றும் அழுத்தம் காரணமாகவே நடந்தது. அவ்வாறு உத்தரவிடும் அமைச்சர், துறைச் செயலர், கமிஷனர் உத்தரவை மீறி நேர்மையான அதிகாரிகளாலும் எதையும் செயல்படுத்த முடியாது.
இந்நிலையில், திராவிட ஆட்சியில்லாமல் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சி அமைத்தது. அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ரமேஷ், துறை ரீதியான நடவடிக்கைகள் பல எடுத்து வருகிறார். அதேநேரம் புதிய திட்டங்களை செயல்படுத்துவது பின், பக்தர்கள் எதிர்ப்பால் திரும்ப பெறுவது போன்ற தடுமாற்றங்களும் ஏற்படுகின்றன.
இந்நிலையில் 18 இணைக் கமிஷனர்கள் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில், பாதிபேர் பெண்கள். இவர்களில் வரும் மார்ச் மாதம் பொது தேர்வு எழுதும் பிள்ளைகளின் பெற்றோர், குற்றச்சாட்டு ஆளாகாதோர், பணியிடமாற்றம் செய்து ஓராண்டு கூட நிறைவடையாதவர்களும் உள்ளனர்.
அறநிலையத்துறை தரப்பில் கூறியதாவது: கடந்த ஆட்சியாளர் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்ட ஒரு சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது சரிதான். ஆனால் இந்த மாற்றத்தில் நல்ல அதிகாரிகளும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். எந்த ஆட்சியாக இருந்தாலும் அமைச்சர், செயலர், கமிஷனர் உத்தரவை மதித்தே நடக்க வேண்டியுள்ளது. தவறு நடந்தால் கீழ்மட்ட அதிகாரிகள் மீதே பழி விழும். உத்தரவிடும் அதிகாரிகள் தப்பிவிடுகின்றனர்.
அதிகாரிகளை மூன்று ஆண்டிற்கு ஒரு முறை இடமாற்றம் செய்ய வேண்டியது அவசியம்தான். அதேநேரம் இந்த மாறுதல், தேர்வு காலம் முடிந்த பின் அமைய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இணைக் கமிஷனர்கள் இடமாற்றம் குறித்து விளக்கம் கோர, கமிஷனரை தொடர்பு கொள்ள முயன்றபோது, முடியவில்லை.
சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் மனக்குறைகளை தனிப்பட்ட குறைகளைக் வெளியிட வேண்டுமே தவிர நிர்வாக ரீதியான குறைபாடாக சித்தரிக்க எத்தனிப்பது தவறு. அரசு அதிகாரிகள் மாற்றல் உத்தரவு வழங்கப்பட்ட ஒரு வாரத்தில் புதிய இடத்தில் பணியில் சேரவேண்டும். நொண்டிச் சாக்கு சொல்லக்கூடாது.
பொதுவாக அரசுத் துறைகளில் மாறுதல் என்பது மார்ச் மாதத்தில் உயர் மட்ட அளவில் ஆரம்பித்து, ஜுன் மாதத்திற்குள் அனைத்து அலுவலர்கள் மட்டத்திலும் நிறைவடையும். அதன் பின்னர் புகார் இருந்தால் மட்டுமே மாறுதல் இருக்கும். ஆனால் திராவிட கட்சிகள் ஆட்சியில் மாறுதலில் மட்டுமல்ல, பதவி உயர்விலும் பணம் பார்த்தனர். தவெக இதில் எப்படி என்று தெரியவில்லை. எனினும் மாறுதலுக்கென உள்ள காலத்தில் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு மாறுதல் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களது குடும்பத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்த ஒரு மாறுதலும் இருக்க கூடாது.
பெருச்சாளிக்கு புது இடம் ஒத்து வராதுமேலும்
-
ஈரோடு ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுதால் பயணிகள் அவதி
-
'கரூரில் இருந்து 40 ஆயிரம் லிட்டர் பால் பல்வேறு நகரங்களுக்கு வினியோகம்'
-
வேளாண் சாகுபடி குறித்து மாணவர்களுக்கு பயிற்சி
-
மூதாட்டி கொலையாகி 22 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறல்
-
வேளாண்மை துறை விழிப்புணர்வு முகாம்
-
புகழிமலை கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை