ஏற்காடு மலை பாதையில் இரு வேறு இடங்களில் விழுந்த மரம், பாறை
ஏற்காடு:ஏற்காட்டில், கடந்த சில நாட்களாக பனிமூட்டத்துடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில், நேற்று காலை ஓய்ந்தது. இந்நிலையில் நேற்று காலை, 7:00 மணிக்கு மலைப்பாதையில், 40 அடி பாலம் அருகே இருந்த ராட்சத கல்யாண முருங்கை மரம் முறிந்து, சாலையின் குறுக்கே விழுந்தது. மரம் முறிந்து விழுந்த சமயத்தில், வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனால் சேலத்தில் இருந்து, ஏற்காட்டிற்கு வேலைக்கு வந்தவர்களின் வாகனங்கள் மற்றும் ஏற்காட்டில் இருந்து சேலத்திற்கு செல்லும் உள்ளூர் மக்களின் வாகனங்கள், செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களே, சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி, வாகனங்கள் செல்ல வழிவகை செய்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர், சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை முழுவதுமாக அப்புறப்
படுத்தினர்.
சாலையில் ராட்சத பாறை
ஏற்காடு மலைப்பாதையில், 60 அடி பாலம் அருகே உள்ள பாறை உருளும் பகுதி என்று எச்சரிக்கை பலகை உள்ள இடத்தில், 30அடி உயரத்தில் இருந்து ராட்சத பாறை ஓன்று நேற்று காலை, 10:30 மணிக்கு உருண்டு சாலையில் விழுந்தது. அந்த நேரத்தில் சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஏற்காடு நெடுஞ்சாலை துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் உதவியுடன், சாலையில் விழுந்த பாறையை அப்புறப்படுத்தினர். கடந்த சில வாரங்களுக்கு முன், அதே இடத்தில் பாறை ஒன்று உருண்டு
விழுந்தது குறிப்பிடதக்கது.