15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம்

நெல்லிக்குப்பம்: மேல்பட்டாம்பாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நெல் மூட்டைகள் வீணாகும் அபாயம் உள்ளது.

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டது.இங்கு தனியாரை விட அதிக விலைக்கு நெல்லை வாங்குவதால் அனைத்து விவசாயிகளும் நேரடி கொள்முதல் நிலையத்துக்கே நெல்லை எடுத்து வந்தனர்.

இங்கு கொள்முதல் செய்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைத்துள்ளனர்.தற்போது நடப்பு பட்டத்துக்கான கொள்முதல் முடிந்தது.ஆனால் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குக்கு எடுத்து செல்லாமல் 2 மாதமாக தேங்கியுள்ளது.

தார்பாய் மூலம் மூடியிருந்தாலும் அதில் ஓட்டைகள் இருப்பதால் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளது.மழை பெய்வதால் தினமும் மூட்டைகளை உலர்த்த வேண்டிய நிலையில் பணியாளர்கள் சிரமபடுகின்றனர்.உடனடியாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை குடோன்களுக்கு எடுத்து செல்ல வேண்டுமென விவசாயிகள் கோரியுள்ளனர்.

Advertisement