அதிகாரிகளே ஆய்வு செய்யுங்க.. ராமநாதபுரம் சந்தைகளில் முத்திரையிடாத தராசுகள் பொருட்கள் எடை குறைவால் ஏமாற்றப்படும் மக்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர், கிராமங்கள், பஜார் பகுதிகளில் நடை பாதை, தள்ளுவண்டிகளில் முத்திரையிடப்படாத தராசுகளை சில வியாபாரிகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இவ்விஷயத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் துறை சட்டப்படி மின்னணு தராசுகள் ஆண்டுக்கு ஒருமுறையும், எடைக்கற்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் முத்திரையிடப்பட வேண்டும். அவ்வாறு சரியான முத்திரையிடப்படாத தராசுகள் மற்றும் எடைகற்கள், தரமற்ற எடையளவுகள் ஆகியவை தொழிலர் நலத்துறையினரால் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் ராமநாதபுரம் பஜார், மீன் மார்க்கெட், உழவர் சந்தை, வாரச்சந்தை உள்ளிட்ட இடங்களில் முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள், வட்டத் தராசுகள், எடைக்கற்கள் உள்ளிட்டவையை சில வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வாரச்சந்தைகளில் தள்ளுவண்டி, தரைக்கடைகளில் மிகவும் தேய்மானமடைந்த எடைக் கற்களை சிலர் பயன்படுத்துகின்றனர்.

சரியாக செயல்படாத மின்னணு தராசுகளை பயன்படுத்துவதாலும் வியாபாரிகள், மக்களிடையே வாக்குவாதம் நடக்கிறது. எனவே மேற்கண்ட இடங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், திடீர் ஆய்வு செய்து முத்திரையிடப்படாத தராசுகளை பறிமுதல் செய்து, முத்திரையின் அவசியம் குறித்து வியாபாரிகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். ---

Advertisement