உதவித்தொகை சான்றிதழ் பெற ரூ.5,000: மாற்றுத்திறனாளிகளிடம் வசூல் வேட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச பயணச் சலுகை, உதவி உபகரணங்கள், வேலைவாய்ப்பில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் கடுமையாக பாதிப்படைந்த நபர்களுக்கு பராமரிப்பு தொகையும் வழங்கப்படுகிறது.

இதுபோன்ற சலுகைகளை பெற தகுதியான அரசு மருத்துவர்களிடம் மாற்றுத்திறன் சதவீதம் குறித்து சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. அதன்படி, அரசு மருத்துவக் கல்லுாரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா தலைமை மருத்துவமனைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

மாதந்தோறும் மூன்றாவது புதன் கிழமையன்று நடக்கும் முகாமில், முடநீக்கியல், கண் காது மூக்கு மற்றும் மனநல மருத்துவர்கள் பரிசோதனை செய்து, அவர்களின் மாற்றுத்திறனுக்கு தகுந்தாற்போல சதவீதம் குறித்த மருத்துவச் சான்று வழங்குகின்றனர்.

இதற்காக, அதிகாலையே வீட்டிலிருந்து புறப்படும் மாற்றுத்திறனாளிகள், காலை 7:00 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மருத்துவமனையில் காத்திருக்கின்றனர். மருத்துவர்களிடம் சான்றிதழ்களை சமர்பித்து, பரிசோதனை செய்கின்றனர்.

இவற்றில் ஏதேனும் சான்றிதழ் இல்லாதோர் அல்லது உதவித்தொகை பெற தகுதியான உடல் ஊனம் இல்லாத நிலையிலும் இருக்கலாம். இதுபோன்ற நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கிட லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, தகுதியற்ற நபர்களிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அவர்களை தகுதியான மாற்றுத்திறனாளிகள் என அங்கீகரிக்கப்படுகின்றனர். இதனால், தகுதியான நபர்கள் புறக்கணிக்கப்படுவதாக மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம் தலைவிரித்தாடினாலும், மற்றவர்கள் உதவி இல்லாமல் வாழ முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையிலும் லஞ்சம் பெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இது தொடர்பான முகாம்களை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து, தவறு செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement