கூட்டுறவு பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை: ஊழியர் சம்மேளனம் அதிருப்தி

மதுரை: கூட்டுறவுத்துறை பணி நியமனங்களில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு நடத்த வேண்டும் என கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்நாடு பொதுச் செயலாளர் சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது : கூட்டுறவுத்துறையின் கீழ் மாவட்ட அளவில் வங்கிகளுக்கான பணியாளர்கள் தேர்வு, எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வாக நடத்தப்படுகிறது. எழுத்துத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வேலைக்குத் தேர்வாகின்றனர். பணி நியமனங்களில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் வேண்டியவர்களுக்கு வேலை தருவதால் மாவட்ட அளவிலான தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.

வங்கிப்பணிக்கான தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்.,) மூலம் மாநில அளவில், அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் தேர்வு நடத்த வேண்டும். இந்த முறையில் கூடுதல் செலவாக நினைத்தால் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்த வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் ரிசர்வ் வங்கி, தேசிய வங்கி வழங்கியுள்ள நெறிமுறைகளை பின்பற்றாமல் தலைமை நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். அதையும் சரிசெய்ய வேண்டும் என்றார்.

Advertisement