மின்துறை, லஞ்ச ஒழிப்பு, சிறைத்துறையில் தொடரும் சர்ச்சை: அமைச்சர் நிர்மல்குமாருக்கு அரசியல் நெருக்கடி

மதுரை: தமிழக அமைச்சரவையில் முக்கியமான துறைகளை கவனித்து வரும் அமைச்சர் நிர்மல்குமாருக்கு அடிக்கடி அவரது துறைகளில் நடக்கும் சம்பவங்களால் அரசியல் நெருக்கடி தொடர்கிறது. இதை தவிர்க்க தன் துறைகள் மீது மட்டும் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என த.வெ.க.,வினர் கூறுகின்றனர்.

நிர்மல்குமாருக்கு மின்சாரம், சட்டம், சிறை, லஞ்ச ஒழிப்பு உட்பட 7 முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சில மாதங்களாக தமிழகத்தில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்தடையை தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன. இன்னும் மின்தடை சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. சில நாட்களுக்கு முன் ஒரு யூனிட் அதிகபட்சமாக ரூ.35க்கு கொள்முதல் செய்ய டெண்டர் விட்டு நிர்மல்குமார் சர்ச்சையில் சிக்கினார்.

அதேபோல் புழல் சிறையில் கடந்த வாரம் அடுத்தடுத்து 2 கைதிகள் ‘எஸ்கேப்’ ஆயினர். நேற்றுமுன்தினம் தேனி சிறையில் 17 கைதிகள் தப்பினர். ‘த.வெ.க., ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 50 கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர்’ என தி.மு.க., குற்றம்சாட்டியது. பதவி ஏற்றபோது சிறை அதிகாரிகளுடன் நிர்மல்குமார் ஆய்வு நடத்தியதோடு சரி. அதன்பிறகு அவர் ‘பிஸி’ ஆனதால் இதுவரை சிறை நிர்வாக பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை.

அடுத்ததாக தி.மு.க., ஆட்சியில் ஊழல் செய்ததாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நேரு மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால் இதுவரை அடுத்தக்கட்டத்திற்கு அந்த வழக்குகள் நகரவில்லை என த.வெ.க.,வினரே குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அமைச்சர் நிர்மல்குமார் தன் துறை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு பதில் பிற அமைச்சர்களின் துறைகள் குறித்து ஆர்வம் செலுத்துகிறார். இதை தி.மு.க., தொடர்ந்து விமர்சிக்கிறது. மின்தடை குறித்து கடந்த ஆகஸ்டிலேயே அவர் ஆய்வுக்கூட்டம் நடத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தடுத்திருக்கலாம். அதுபோல் தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் உள்ளன. அது அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதை அ.தி.மு.க., நா.த., உள்ளிட்ட கட்சிகள் கிண்டலடிக்கின்றன. தன் துறை சார்ந்த விஷயங்களில் அமைச்சர் நிர்மல்குமார் கவனம் செலுத்தினால் மட்டுமே த.வெ.க., அரசுக்கு களங்கம் ஏற்படாமல் இருக்கும் என்றனர்.

Advertisement