காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் இரட்டை திருமாளிகை புதுப்பிக்க ரூ.92.89 லட்சம் ஒதுக்கீடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள இரட்டை திருமாளிகையைப் பழுது பார்த்து புதுப்பிக்க, 92.89 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழைமையான கோவில்களில் ஒன்றான ஏகாம்பரநாதர் கோவிலின் பல்வேறு பகுதிகள் சீரமைக்கப்பட்டு, கடந்தாண்டு டிசம்பரில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆனால், கோவிலின் மேற்கு ராஜகோபுரம், அருகே இருந்த இரட்டை திருமாளிகை போன்ற இடங்களில் போதிய சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை.

இந்நிலையில், இரட்டை திருமாளிகையைப் பழுதுபார்த்து புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 92.89 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெண்டர் பணிகள் முடிந்தவுடன், ஹிந்து சமய அறநிலையத் துறையில் பதிவு பெற்ற ஸ்தபதி அல்லது சிற்பி மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Advertisement