மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்

- நமது டில்லி நிருபர் -

டில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாகத்தில், 12வது பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்ற கூட்டம் அக்டோபர் 26, 27ம் தேதி நடந்தது. சபாநாயகர் ஓம்பிர்லா தலைமை தாங்கினார். உறுப்பு நாடுகள் ஒருமித்த கருத்துடன் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. அதில் கூறியிருப்பதாவது:

* மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மேலும் மோசமடைவதைத் தடுக்க, சம்பந்தப்பட்ட நாடுகள் அனைத்தும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்; நிலைமையை மேலும் தீவிரமாக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

* மோதல்களின் போது மக்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

* சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக விதிக்கப்படும் ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகள் மற்றும் கட்டாய நடவடிக்கைகள் ஆகியவை அங்குள்ள பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது.

* இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கு நிரந்தர அமைதி காண, பாலஸ்தீன மக்களின் இறையாண்மை மற்றும் சுதந்திர உரிமையை மதிக்கும் தீர்வு அவசியமானது. வர்த்தகப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

* போரைக் கைவிட்டு, அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement