நிலத்தில் முதலீடு செய்தால் தங்கம் பரிசு ரூ. 50 லட்சம் சுருட்டிய மூவர் சிக்கினர்
அண்ணா நகர்: நிலத்தில் முதலீடு செய்தால், குலுக்கல் முறையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என, ஆசை காட்டி, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்து, தலைமறைவான மூவரை அண்ணா நகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தீபக், 35. இவரிடம், அண்ணா நகர் மூன்றாவது அவென்யூவில் செயல்பட்ட குபேரா என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர், நிலத்தில் முதலீடு செய்தால் தங்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
இதை நம்பி தீபக், 14 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதேபோல், உமா என்பவர் உள்ளிட்டோரும் மொத்தம், 50 லட்சம் ரூபாய் மேல் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், 2023ல் நிறுவனத்தை மூடிவிட்டு அதன் நிர்வாகிகள் தலைமறைவாகினர். இதுகுறித்து தீபக் மற்றும் பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின்படி, அண்ணா நகர் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
தலைமறைவாக இருந்த சூளைமேட்டைச் சேர்ந்த சுமித்ரா, 49, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சதாசிவம், 49, அயனாவரத்தைச் சேர்ந்த தன்ராஜ், 32, ஆகிய மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், இதேபோல், பலரிடம் மோசடி செய்திருப்பது தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.