அரசு கட்டடங்களில் 12 ஆண்டுகளுக்கு பின் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் துார்வாரல்

சென்னை: அரசு கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை, 12 ஆண்டுகளுக்கு பின் துார்வாரும் பணியை, பொதுப்பணித்துறை செய்து வருகிறது.

தமிழகம் முழுதும், மழைநீர் சேமிப்பை முன்னெடுக்கும் வகையில், ‘துளி’ என்ற பெயரில், விழிப்புணர்வு இயக்கத்தை, முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இதன் கீழ், தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு கட்டடங்களில், பல ஆண்டுகளுக்கு பின், மழைநீர் சேமிப்பு அமைப்பு, வடிகால்கள் துார்வாரும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொடங்கினார். கடந்த 2003ம் ஆண்டுக்கு பின் கட்டப்பட்ட அரசு கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயமானது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, மழை நீர் சேகரிப்பு அமைப்பை துார்வார வேண்டும். ஆனால், 2014ம் ஆண்டுக்கு பின், இப்பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை.

இதனால், மரவேர்கள், சகதிகள் அடைத்து, சேமிப்பு அமைப்பு முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. அரசு கட்டடங்களில் உள்ள போர்வெல்களிலும், தண்ணீர் இல்லாமல் போனது. இந்நிலையில், மழைநீர் சேகரிப்பை மீண்டும் மக்கள் இயக்கமாக, முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.

அதன்படி, சென்னை தலைமைச் செயலகம், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, எழிலகம் உள்ளிட்ட பெரிய கட்டடங்களில், 12 ஆண்டுகளுக்கு பின், மழைநீர் சேமிப்பு அமைப்பு, வடிகால்கள் துார்வரப்படுகின்றன.

அதேபோல், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனை, அரசு வளாகம் உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களிலும், இப்பணிகள் நடக்கின்றன.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement