13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு: குறைந்தபட்சம் ரூ.50; கூடுதல் கி.மீ.,க்கு ரூ.25

32

சென்னை: தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பின், ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைத்து நேற்றிரவு, அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, குறைந்தபட்சமாக, 50 ரூபாயும், கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கும், 25 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் 2013 ஆகஸ்டில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல், 1.8 கி.மீ., துாரத்துக்கு குறைந்தபட்சமாக 25 ரூபாயாகவும், அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் 12 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

அதன்பின், பெட்ரோல் விலை உயர்வு, காப்பீட்டு கட்டணம், வாகனப் பராமரிப்பு செலவு, உதிரிபாகங்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங் களால், கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேநேரம், டிரைவர்கள் மற்றும் பயணியர் நலன்களை சமநிலைப்படுத்தி, ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம், 2022 பிப்ரவரியில், தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து, 13 ஆண்டுகளுக்குப் பின், ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைத்து, தமிழக அரசு நேற்றிரவு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த உத்தரவை, மாநில போக்குவரத்து ஆணையம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, முதல் 1.8 கி.மீ., துாரத்துக்கு குறைந்தபட்சமாக 50 ரூபாய், கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கும் 25 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண விதிகளின்படி, இரவு 10:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை, வழக்கமான கட்டணத்தைவிட, 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். காத்திருப்புக் கட்டணமாக நிமிடத்திற்கு, 1 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement