சீனா ஆக்கிரமிப்பு குறித்து காங்., தவறான வீடியோ வெளியிட்டது அம்பலம்! மன்னிப்பு கேளுங்கள் என மத்திய அமைச்சர் ரிஜிஜு ஆவேசம்
புதுடில்லி: நம் எல்லை பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாக, ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களை, சமூக வலைதளத்தில், காங்., செய்தித் தொடர்பாளர் ரிது சவுத்ரி பரப்பியது அம்பலமானது. இதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ., மூத்த தலைவரும், பார்லி., விவகார அமைச்சருமான கிரண் ரிஜிஜு, ''நாட்டு மக்களிடம் காங்., பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, வலியுறுத்தினார்.
பீஹாரைச் சேர்ந்த காங்., செய்தித் தொடர்பாளர் ரிது சவுத்ரி, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில், நேற்று முன்தினம் இரண்டு வீடியோக்களை பகிர்ந்தார். அதில், நம் எல்லை பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாகவும், அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை அந்நாடு ஆக்கிரமித்து விட்டதாகவும் பதிவிட்டார். மேலும், சீன ராணுவம் ஊடுருவியதாக லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் காலியா பேசுவது போல, 'மார்பிங்' செய்யப்பட்ட வீடியோவையும் அவர் பகிர்ந்தார்.
இதை திட்டவட்டமாக மறுத்து, நம் ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமூக வலைதளத்தில் ரிது சவுத்ரி பகிர்ந்த வீடியோக்கள், ஏ.ஐ., மூலம் உருவாக்கப்பட்டவை. அவை தவறாக வழிநடத்தக்கூடியவை. அவற்றை நம்ப வேண்டாம். சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் என்பது, இந்தியா -- சீனா இடையே அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட எல்லை வர்த்தகப் பகுதி. அங்கு வணிக வாகனங்கள் வழக்கமாக செல்வதை தவறாக சித்தரித்து, சீன ராணுவ ஊடுருவல் என, வதந்தி பரப்பப்பட்டு உள்ளது.
அதே போல, 'ஸ்பியர் கார்ப்ஸ்' படை தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் காலியா பேசுவது போல வெளியான வீடியோவும், முற்றிலும் போலியானது. அவரது இந்த வீடியோ, 2023 அக்டோபரில் எடுக்கப்பட்டது. அது, ஜம்மு- - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் நடந்த ஊடுருவல் தடுப்பு நடவடிக்கை குறித்து அவர் அளித்த பேட்டி. அருணாச்சல பிரதேசம் குறித்தோ அல்லது வீரர்களுக்கு தளவாடங்கள் மறுக்கப்படுவது குறித்தோ அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று கூறியதாவது: நம் ராணுவத்தின் பெருமையை சீர்குலைக்கும் வகையில், ஏ.ஐ., மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களை காங்., பரப்பி உள்ளது. இதற்காக நாட்டு மக்களிடம் அக்கட்சி உடனடியாக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இது, அப்பட்டமான துரோக செயல். நம் எதிரிகள் செய்யும் கொடூரமான சதிவேலைகளுக்கு இது சற்றும் குறைந்தது அல்ல. நாட்டின் எதிரிகளின் சார்பாக, இந்த இழிவான பிரசாரத்தை காங்., முன்னெடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
@quote@
நம் ஆயுதப் படைகளை களங்கப்படுத்த போலி வீடியோக்களை காங்., தலைவர்கள் பரப்புவது, அக்கட்சியின் நீங்காத ராணுவ எதிர்ப்பு மனநிலையை மீண்டும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. ஆயுதப் படைகளின் கண்ணியத்தையும், நற்பெயரையும் சீர்குலைப்பதில் காங்., தொடர் குற்றவாளியாக செயல்படுகிறது.
- சி.ஆர்.கேசவன்,
செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,quote
சுப்ரமணிய சாமி உட்பட பலர் இன்னும் இது போன்ற வேலைகளையே செய்து வருகிறார்கள். அவர்களைப்பொறுத்த மட்டில் காங்கிரஸ் ஆட்சி போல இருக்கவேண்டும் என்பது எதிர்பார்ப்பு.மேலும்
-
அத்திக்கடவு திட்ட குளங்களுக்கு சோதனை அடிப்படையில் தண்ணீர்
-
வணிக வரி அலுவலகத்தை ஈரோட்டுக்கு மாற்ற முறையீடு
-
முதல்வர் வருகை குறித்து முன்னேற்பாடு கூட்டம்
-
மாயாற்றில் வெள்ளம்; வாகனங்கள் செல்ல தடை
-
பார்டர் - ஜரிகையுடன் தயாராகும் அரசின் இலவச வேட்டி - சேலை
-
ஈரோடு ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுதால் பயணிகள் அவதி