மருத்துவ மாணவர்களுக்கு கிராமங்களில் கட்டாய சேவை: மத்திய அரசுக்கு கோர்ட் அட்வைஸ்

2

- சிறப்பு நிருபர் -

'நாடு முழுதும் மருத்துவ மாணவர்கள், கட்டாய கிராமப்புற சேவை புரிவது தொடர்பாக, அரசியல் சாசன கோட்பாடுகளின் அடிப்படையில் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்' என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'கர்நாடக மருத்துவக் கவுன்சிலில் நிரந்தரப் பதிவு பெற வேண்டுமெனில், மருத்துவ மாணவர்கள் ஓராண்டு வரை கிராமப்புற மக்களுக்கு கட்டாய சேவையாற்ற வேண்டும்' என, கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் அராதே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நாட்டின் நலனுக்காகவும், சுகாதார மேம்பாட்டுக்காவும் கிராமப்புற சேவை அவசியமா, இல்லையா என்பதை தீர்மானிக்க இவ்வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. சுகாதாரம் என்பது அனைவருக்குமான அடிப்படை உரிமை. எதிர்காலத்தில் கிராமங்களிலும் தனியார் மருத்துவமனைகள் அதிக அளவில் உருவாகலாம். எனவே, மத்திய அரசு இது குறித்து தெளிவாக சிந்திக்க வேண்டும். கிராமப்புற சேவை தொடர்பாக மத்திய அரசு தெளிவான கொள்கையை வகுக்கப் போகிறதா, யாரிடம் ஆலோசிக்கப் போகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

அரசியல் சாசன கோட்பாடுகளின் அடிப்படையில், மாநில அரசுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்துடன் கலந்து ஆலோசித்து, இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும். இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றமே வகுக்க நேரிடும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து இவ்வழக்கு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement