அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை: ‘அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்’ என, முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பாட்டிற்கும் முக்கிய பங்களிக்கும் தொழிலாளர்களின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து, போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவனங்களின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் வழங்கப்படும்.

இதன்படி, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், அரசு போக்குவரத்து கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள், ஆவின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

ஒதுக்கக்கூடிய உபரித் தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ், 1.67 சதவீதம் கருணைத்தொகை என, 10 சதவீதம் வழங்கப்படும்.

வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்களுக்கு, 8.33 சதவீதம் மிகை ஊதியம், 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வாரிய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும். நுகர்பொருள் வாணிப கழகத்தின் தற்காலிக தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாய் கருணை தொகையாக வழங்கப்படும்.

இதன் வாயிலாக, போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 8,400 ரூபாய் முதல் அதிகபட்சம் 16,800 ரூபாய் வரை பெறுவர். மொத்தமாக 2.60 லட்சம் பொதுத்துறை தொழிலாளர்களுக்கு, முறையே 367 கோடி, 20 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணை தொகையாக வழங்கப்படும்.

கூட்டுறவு மற்றும் நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு, தனித்தனியாக போனஸ் ஆணைகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement