‘பாரா’ வீரர்களுக்கு 20 ஏக்கரில் மைதானம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

சென்னை: ‘‘பாரா எனப்படும், மாற்றுத்திறனாளி மற்றும் உடல் குறைபாடு உடைய விளையாட்டு வீரர்களுக்கு, 20 ஏக்கரில் புதிய கனவு மைதானம் அமைக்கப்படும்,’’ என, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

ஜப்பானில் கடந்த வாரம் நடந்த, ஆசிய ‘பாரா’ விளையாட்டுப் போட்டியில், பதக்கம் வென்ற, தமிழகத்தின் வீரர், வீராங்கனைகள் 13 பேரை, சென்னை, நேரு விளையாட்டு அரங்கில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நேற்று காலை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், விளையாட்டுத் துறை செயலர் சந்தீப்நந்துாரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில், பதக்கம் வென்ற வீரர்களுக்கு வாழ்த்துகள். பாரா விளையாட்டு வீரர்களுக்கு, சகல வசதிகளும் அடங்கிய மைதானம் அமைக்க, முதல்வரிடம் பேசியுள்ளேன்.

குறைந்தபட்சம் 20 ஏக்கரில், மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவமான, சீனா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் உள்ளது போல், அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய மைதானம் அமைக்கப்படும். ஆசிய போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு, நாளை நேரு அரங்கில் நடக்கும் விழாவில், முதல்வர் நேரில் ஊக்கத்தொகை வழங்க உள்ளார்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement