ஈரோட்டில் சி.என்.ஜி., காஸ் தட்டுப்பாடு பல மணி நேரம் காத்திருக்கும் வாகனங்கள்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சி.என்.ஜி., காஸ் தட்டுப்பாட்டால், பங்க்குகளில், வாகனங்கள் பல மணி நேரம் காத்து கிடக்கும் நிலை தொடர்கிறது.

ஈரோடு மாவட்டத்துக்கான பெட்ரோல் பங்க்குகளுக்கு பெருந்துறை, சங்ககிரி உட்பட பல இடங்களில் இருந்து பெட்ரோல், டீசல் வரத்தாகிறது. சி.என்.ஜி., காஸ், திருப்பூரில் இருந்து வரத்தாவதால் குறைந்த அளவே வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் வாகனங்கள் காத்து கிடக்கும் அவலம் தொடர்கிறது.

இதுபற்றி ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது:

ஈரோடு பகுதியில் குமலன்குட்டை, ஆணைக்கல்பாளையம், வில்லரசம்பட்டி நால்ரோடு போன்ற இடங்களில் மட்டுமே சி.என்.ஜி., பங்க் உள்ளது. இவற்றுக்கு திருப்பூரில் இருந்து குறைவாகவே காஸ் வரத்தாகிறது. அரசு பஸ்கள், சில தனியார் பஸ்களுக்கு வழங்கிய பிறகே எங்களுக்கு வழங்குகின்றனர். நான்கு மாதத்துக்கு மேல் இப்பிரச்னை நிலவுகிறது. ஒரு அரசு பஸ்சுக்கு முழுமையாக நிரப்ப, 25 முதல், 30 நிமிடமாகிறது.

காஸ் வருவது தெரிந்ததும், மொத்தமாக பஸ்களை நிறுத்தி பிடிப்பதால், 2 மணி நேரம் நின்றும் ஒரு லிட்டர் கூட பிடிக்காமல் சென்றுள்ளோம். அரசு போக்குவரத்து ஈரோடு கிளையில் சி.என்.ஜி.,க்கான பங்க் தயாராகி வருகிறது. அப்பணி முடிந்தால் இப்பிரச்னை சற்று குறையும். இதற்கு தீர்வாக ஆட்டோக்களுக்கு என ஒரு பங்க்கை ஒதுக்க வேண்டும். நேற்றைய நிலையில் ஒரு லிட்டர் சி.என்.ஜி., காஸ், கோவை - 96.90 ரூபாய், சேலம், கரூர், தர்மபுரி-97.90 ரூபாய். ஆனால், ஈரோட்டில் எட்டு ரூபாய் முதல், 10 ரூபாய் கூடுதலாக வழங்கி பிடிக்கிறோம். இப்பிரச்னைகளுக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

Advertisement