வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர்:கரூர் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். தேர்தலில் பணியாற்றிய அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கும், மதிப்பூதியம் உடனடியாக வழங்க வேண்டும். எஸ்.ஐ.ஆர்., பணிகளில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலர்களுக்கு, ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும். காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் போன்ற நிலம் எடுப்பு அலுவலகங்கள் மற்றும் கலால் அலுவலகங்களில் பணியாற்றும் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு மாதம் தோறும் குறித்த தேதியில் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
வருவாய்த் துறையில் பணியாற்றும் இளநிலை வருவாய் ஆய்வாளர்கள், தட்டச்சர் இடையே ஒருங்கிணைந்த முதுநிலையை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட வேண்டும். நடப்பண்டிற்கான மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை தாசில்தார் பட்டியல்களை விரைந்து வெளியிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட கிளை செயலாளர் பூவிழி கண்ணன், மாவட்ட இணை செயலாளர் சரவணன், மாவட்ட துணைத் தலைவர் கணேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.