எப்.ஐ.ஆர்., நிலையை அறிய கேரளாவில் புதிய திட்டம்

திருவனந்தபுரம்: கேரள போலீஸ் ஸ்டேஷன்களில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படுவதில் இருந்து வழக்கு முடியும் வரையிலான நிலையை, ‘டாஷ்போர்டு’ எனப்படும், ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் புதிய கண்காணிப்பு முறை அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் சதீசன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இம்மாநில சட்டசபை கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ., – எம்.எல்.ஏ., பாலகோபால் பேசுகையில், ‘‘பிளாக்மெயில், போலி செய்திகள் போன்ற புகார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதில்லை. ஒருவேளை வழக்கு பதிவு செய்தாலும் தீவிரமாக விசாரிப்பதில்லை,’’ என்றார்.

இதற்கு பதிலளித்த மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூறியதாவது:

ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதை கண்காணிக்க புதிய முறை அமலாகிறது. ‘டாஷ்போர்டு’ எனப்படும், தரவுகளை தொகுத்து ஒரே இடத்தில் கண்காணிக்கும் முறை நவம்பர் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுதும் தினமும் எத்தனை எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படுகின்றன. அந்த புகார்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை உள்துறை அமைச்சர் அலுவலகம் மற்றும் உயர் அதிகாரிகள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement