மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக தீர்வு காண வாரியம் உத்தரவு
சென்னை:
உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த பிரிவில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து, நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து பிரிவு அலுவலகங்களுக்கும் தமிழக மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், வீடு, கடைகளை உள்ளடக்கிய குறைந்த மின்சாரம் பயன்படுத்துவோருக்கு தாழ்வழுத்த பிரிவிலும், அதிக மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு உயரழுத்த பிரிவிலும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. மின் வாரியத்தின் பல அலுவலகங்களில், புதிய மின் இணைப்பு கோரி பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் மீது, எந்த நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்வதாக புகார்கள் எழுந்தன. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும் தெரியவந்தது.
இந்நிலையில், உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த பிரிவில் மின் இணைப்பு கோரி, பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் சமர்ப்பித்த அனைத்து நிலுவை விண்ணப்பங்கள் மீதும், உடனடியாக நடவடிக்கை எடுக்க, அனைத்து பிரிவு அலுவலகங்களுக்கும் மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் பகிர்மான கழக இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவு:
அனைத்து நிலுவை விண்ணப்பங்களும் மறு ஆய்வு செய்யப்பட்டு, விதிமுறைகள் மற்றும் காலக்கெடுவை கண்டிப்பாக பின்பற்றி, முன்னுரிமை அடிப்படையில் இணைப்பு வழங்க வேண்டும். மின் இணைப்பு வழங்கப்பட்டு, மின்சாரம் விநியோகம் செய்யப்படாமல் உள்ள சேவைகளுக்கு, உடனடியாக மின் விநியோகம் செய்ய வேண்டும். கள ஆய்வுக்காக காத்திருக்கும் விண்ணப்பங்கள், உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை தாமதமின்றி தொடங்கப்பட வேண்டும்.
விதிமுறைகளுக்கு அப்பால் ஏற்படும் எந்த தாமதமும், தீவிரமாக கருதப்படும் என, எச்சரிக்கப்படுகிறது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து, பிரிவு அலுவலகங்கள் வாரியான அறிக்கை மற்றும் தாமதத்திற்கான காரணங்களை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.