சட்டசபை விதிமுறைகளை உருவாக்கும் பரிந்துரை டில்லியில் இரண்டாவது கட்ட ஆலோசனை கூட்டம்

புதுடில்லி: “சட்டசபைகளுக்கான சீரான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குவதற்கான பரிந்துரைகள், அடுத்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் சமர்ப்பிக்கப்படும்,” என, உத்தர பிரதேச மாநில சட்டசபை சபாநாயகர் சதீஷ் மஹானா கூறினார்.

நாடு முழுதும் சட்டசபைகளில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளை ஒரே சீராக இருக்குமாறு உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட, சபாநாயகர்கள் குழுவின் இரண்டாவது ஆய்வுக் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.

டில்லி சட்டசபை வளாகத்தில் நடந்த கூட்டத்தில், டில்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து மாநில சட்டசபை சபாநாயகர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களின் சட்டசபைகளில் பின்பற்றப்படும் விதிமுறைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த விதிமுறைகளை ஒருங்கிணைத்து, ஒரே மாதிரியான விதிமுறைகளை உருவாக்க முடியுமா என விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், சட்டசபை கூட்டத்தொடரின் கால அளவு, வருகைப் பதிவு, சபையை ஒத்திவைத்தல் மற்றும் பாலின நடுநிலை கொண்ட சொற்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின், உத்தர பிரதேச சட்டசபை சபாநாயகர் சதீஷ் மஹானா, நிருபர்களிடம் கூறியதாவது:

சட்டசபை விதிமுறைகள் சீராக இருக்கும் வகையில் வடிவமைக்க, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவால் அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம், கர்நாடக மாநிலம், மைசூரில் நடந்தது. இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மிக முக்கியமான விவாதங்கள் நடந்தன. முக்கிய ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்திய பின், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குழு உறுப்பினரும், டில்லி சட்டசபை சபாநாயகருமான விஜேந்தர் குப்தா கூறுகையில், “சட்டசபை விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து பொதுவான மாதிரியை உருவாக்குவதில் ஒருமித்த கருத்து எட்டுவது அவசியம். இதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டசபைகளிலும் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளது,” என்றார்.

Advertisement