பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லையைத் தடுக்க குழு: கலெக்டர் பத்மஜா உத்தரவு

கள்ளக்குறிச்சி: பெண்கள் பணிபுரியும் இடத்தில் பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்திட 4 பேர் கொண்ட குழு அமைத்திட வேண்டும் என்று கலெக்டர் பத்மஜா தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 10க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்படும் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், கையாளவும், தீர்வு காணவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தகுதியான 4 பேரைக் கொண்டு உள்ளக குழு அமைக்க வேண்டும்.

அனைத்து அரசு சார்ந்த, அரசு சாரா நிறுவனங்களுக்கும் பொருந்தும். குழுவின் தலைவராக உயர் பெண் அலுவலர், சமூக பணியில் அனுபவம் உள்ளவர் 2 பேர், சட்ட அறிவு பெற்றவர் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வுடைய ஒருவர் என மொத்தம் 4 பேர் நியமிக்க வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனங்களிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும். உள்ளக குழு அமைக்கப்பட்ட விபரத்தினை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது dhewkallai13@gmail.com என்ற முன்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் அனைத்து அரசு சார நிறுவனங்கள் SHe BOX (https://shebox.wcd.gov.in) என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனை பின்பற்றாத நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement