நியோமேக்ஸ் மோசடி போடி ஓட்டலுக்கு 'சீல்'

போடி:

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் போடியில் உள்ள கிரீன் ராயல் ஓட்டல் அண்டு ரிசார்ட்சை திண்டுக்கல் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் நேற்று பூட்டி 'சீல்' வைத்தனர்.

மதுரையை தலைமை இடமாகக் கொண்டு நியோமேக்ஸ் நிறுவனம் ரூ.பல கோடி நிதி மோசடி வழக்கில் சிக்கியது. முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். ஏமாற்றப் பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தரும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி குற்றாலம் ரிசார்ட், திண்டுக்கல் ஜம்புதுரை கோட்டையில் கொடைரோடு டிரைவ் இன் ஓட்டல், கேட்டரிங் இன்ஸ்டிட்யூட், மதுரை அருகே கீழச் சின்னம்பட்டியில் உள்ள பேவர்பிளாக் தொழிற்சாலை உட்பட பல்வேறு சொத்துக்கள் முடக்கப்பட்டு மின்னணு முறையில் ஏலம் விட உத்தர விடப்பட்டு உள்ளது.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி செல்லும் முந்தல் ரோட்டில் இயங்கி வந்த கிரீன் ராயல் ஓட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் விடுதியும் மோசடி வழக்கில் சிக்கிய நிறுவனத்துடன் தொடர்புடையது. இதையடுத்து திண்டுக்கல் பொருளாதார குற்றப் பிரிவு டி.எஸ்.பி., இமானுவேல் ராஜ் குமார் தலைமையில் போலீசார் நேற்று பூட்டி 'சீல்' வைத்தனர்.

Advertisement