கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி

கிருஷ்ணகிரி: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கிட்டபைனூரை சேர்ந்தவர் மகேந்திரன், 50; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றார்.

காலை, 9:30 மணி அளவில் ஒப்பதவாடி கூட்ரோடு அருகே சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னாள் சென்ற ஈச்சர் மினி லாரி எந்தவித சிக்னலும் இன்றி திடீரென நின்றது. கட்டுப்பாட்டை இழந்த பைக், லாரியில் மோதியதில் மகேந்திரன் பலியானார். விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.*ஊத்தங்கரை அடுத்த கரட்டூரை சேர்ந்தவர் காளியப்பன், 66, விவசாயி. நேற்று முன்தினம் டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுள்ளார். மாலை, 4:00 மணிஅளவில் வாத்தியகொட்டாய் அருகே புலியூர் - ஊத்தங்கரை சாலையில் சென்றபோது, அவ்வழியே வேகமாக வந்த மாருதி ஸ்விப்ட் டிசையர் கார் மொபட்டில் மோதியதில் காளியப்பன் பலியானார். சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, காரை ஓட்டிச் சென்ற கொல்லப்பட்டியை சேர்ந்த கார்த்திக், 34, மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
*சூளகிரி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவன், 50, சலுான் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு பஜாஜ் சிடி 100 பைக்கில் சென்றார். சுண்டகிரி அருகே கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரில் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வேகமாக வந்த மாருதி எர்டிகா கார், இவரது பைக், மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில் சஞ்சீவன் பலியானார்.
அவரது பைக்கில் அமர்ந்து சென்ற பீர்ஜேப்பள்ளியை சேர்ந்த கட்டட தொழிலாளி சந்திரன், 50, அவ்வழியே நடந்து சென்ற தர்மபுரி மாவட்டம், தானியன் கொட்டாயை சேர்ந்த முத்து, 39, ஆகிய இருவரும் காயமடைந்தனர். விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிந்து, காரை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம், சிக்கபெல்லாபுரா மாவட்டம், சித்திலக்கொட்டாவை சேர்ந்த முரளி மோகன், 36, மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement