இந்திய உணவு கழக கோட்ட அலுவலகத்தில் 4,950 தேவையற்ற கோப்புகள் கண்டுபிடிப்பு
புதுச்சேரி: இந்திய உணவுக் கழகம், புதுச்சேரி கோட்ட அலுவலகத்தில் 4,950 தேவையற்ற கோப்புகள் கண்டறியப்பட்டு, 1,500 சதுர அடி இடவசதி விடுவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொடர்ச்சியான நிறுவனத் துாய்மை மற்றும் நிறுவனத் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் கோட்ட அலுவலகம், ‘சிறப்பு இயக்கம் 6.0’ திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதில், பழைய ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், 4,950 தேவையற்ற கோப்புகள் கண்டறியப்பட்டன. அந்த ஆவணங்களையும், அவற்றுடன் தொடர்புடைய தேவையற்ற பொருட்களையும் விதிமுறைகளின்படி முறையாக அகற்றுவதற்கு விரிவான திட்டம் வகுக்கப்பட்டு, அலுவலகத்தில் 1,500 சதுர அடி இடவசதி விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அகற்றப்படும் பொருட்கள் மூலம் அரசுக்கு ரூ. 42 ஆயிரம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், கோப்புகள் மற்றும் ஆவணங்களை முறையாக நிர்வகித்தல், இடவசதியை மேம்படுத்துதல், அலுவலக வளாகத்தைத் துாய்மையாகவும், பசுமையாகவும் பராமரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதையொட்டி, அலுவலகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கிடங்குகளில் துாய்மை மற்றும் மரக்கன்று நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 55 பணியாளர்கள் பங்கேற்று, அலுவலக வளாகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் 15 மரக்கன்றுகளை நட்டனர்.
அக்டோபர் மாதம் முழுதும் நடக்கும் ‘சிறப்பு இயக்கம் 6.0’, மத்திய அரசின் அனைத்து கள அலுவலகங்களிலும் இடவசதியைச் சிறப்பாகப் பயன்படுத்துதல், பணிச் சூழலை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.