த.வெ.க., உட்கட்சி பூசல்: நள்ளிரவில் பஞ்சாயத்து

சென்னை: த.வெ.க.,வில், மாற்றுக் கட்சியினருக்கு முக்கியத்துவம் அளிப்பது மற்றும் உட்கட்சி பூசல் தொடர்பாக, கட்சி நிர்வாகிகளை அழைத்து, கட்சியின் பொதுச்செயலரான அமைச்சர் ஆனந்த், நள்ளிரவில் சமரச பேச்சு நடத்தினார்.

தமிழகத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி ஆட்சியை த.வெ.க., அமைத்துள்ளது. அமைச்சரவையில், கூட்டணி கட்சிகளுக்கு நான்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

கடந்த சட்டசபை தேர்தலின்போது, இந்த கூட்டணி கட்சிகள் அனைத்தும், தி.மு.க., கூட்டணியில் இருந்தன. த.வெ.க., தனித்து போட்டியிட்டது. த.வெ.க.,வினர் பலரும், நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

த.வெ.க.,வை பலப்படுத்தவும், மக்களிடம் நற்பெயர் எடுக்கவும், இரவு பாடசாலை, பால், முட்டை, ரொட்டி திட்டம், இலவச காலை உணவு, பகல் உணவு திட்டங்களை செயல்படுத்தியதோடு, கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கடுமையாக உழைத்தனர். தற்போது, த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின், ஆட்சியிலும், கட்சியிலும், மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், உட்கட்சி பூசலும் ஆங்காங்கே நடைபெறுகிறது.

உள்ளாட்சி தேர்தலில், 'சீட்' பெற, இப்போதே மாற்று கட்சியினர் பேரம் பேச துவங்கியுள்ளனர். இதற்காக, பணத்தை வாங்கி கொண்டு, பலருக்கும் பதவிகளை, த.வெ.க., மாவட்ட செயலர்கள் வழங்கி வருகின்றனர். இதை கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த த.வெ.க., நிர்வாகிகள், சாலை மறியலில் ஈடுபடும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர், வேலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளை, சென்னை பனையூரில் உள்ள, த.வெ.க., தலைமை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் அழைத்திருந்தனர். த.வெ.க., பொதுச்செயலரும், அமைச்சருமான ஆனந்த், இரவு 11:00 மணி முதல் நேற்று அதிகாலை 4:15 மணி வரை, அவர்களிடம் பேசி சமாதானம் செய்தார்.

'உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள சூழலில், உட்கட்சி பூசலில் ஈடுபடக்கூடாது' எனவும் அவர்களை கண்டித்தார். மேலும், 'கட்சிக்காக உழைத்த த.வெ.க.,வினருக்கு, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, அதிகளவில் வாய்ப்பு வழங்கப்படும்' என, ஆனந்த் உத்தரவாதம் அளித்துள்ளார்.

Advertisement