கோட்டைமேடு சந்திப்பு ரவுண்டானாவில் போக்குவரத்து நெருக்கடி தீர்வது எப்போது?
கோவை: உக்கடத்தில் இருந்து சுங்கம் சந்திப்பு வரை வாலாங்குளம் பைபாஸ் எனப்படுகிறது. கோட்டைமேடு சந்திப்பு, அரசு மருத்துவமனை செல்லும் சந்திப்பு என 2 இடங்களில் ரவுண்டானா உள்ளது. கோட்டைமேடு சந்திப்பை கடப்பதற்குள் ஒரு வழியாகி விடுவோம் என்பதற்கேற்ப வாகன ஓட்டிகள் ஊர்ந்தே செல்ல வேண்டியிருக்கிறது.
உக்கடத்தில் இருந்தும், மேம்பாலத்தில் இருந்தும் வாகனங்கள் வருகின்றன. அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியே வந்து, பஸ் ஸ்டாண்ட்டுக்கு ரவுண்டானாவை சுற்றி, திரும்பிச் செல்கின்றன.
எதிர் திசையில் சுங்கம் சந்திப்பில் இருந்து உக்கடம் நோக்கியும், கோட்டைமேடு நோக்கியும் பலரும் வருகின்றனர். கோட்டைமேட்டில் இருந்து சுங்கம் சந்திப்பு, உக்கடம் சந்திப்புக்கும் பலரும் செல்கின்றனர். ஒரே நேரத்தில் 4 வழிகளில் வாகனங்கள் வருகின்றன. பீக் அவர்சில் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து திணறுகிறது.
சில நாட்களுக்கு முன், மேம்பாலத்தில் ஒரு போலீஸ்காரர் நின்றிருந்து, உக்கடத்தில் இறங்கும் வாகனங்கள், சுங்கம் செல்லக் கூடிய வாகனங்களை ஒழுங்குபடுத்தியதோடு, மைக்கில் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தளவுக்கு மேம்பாலத்தில் வாகனங்கள் தேங்குகின்றன.
என்ன செய்ய வேண்டும்?
ரோட்டோரத்தில் வேன் ஸ்டாண்ட் உள்ளது. வேன்களை நிறுத்த அருகிலேயே வேறிடம் ஒதுக்கிக் கொடுத்தால் போதும். பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியேறும் வழியை மாற்றினால், உக்கடத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு வராது. ரவுண்டானா சுற்றுப்பகுதியை ரோட்டின் அகலத்துக்கேற்ப இன்னும் சற்று பெரிதாக்க வேண்டும். சாலைத்தீவு திடல்களுக்கான இடைவெளி 10 மீட்டர் இருந்தால் போதும்; வாகனங்கள் சிரமமின்றி செல்லும் என்கின்றனர் சாலை பாதுகாப்புக்குழுவினர். இதன்படி, சோதனை முறையில் தாமதமின்றி ரவுண்டானாவை மாற்றியமைத்து பார்க்க வேண்டும்.