ஆவின் பொருட்கள் விலையேற்றம்! தீபாவளி பண்டிகை இனிப்புகளும் விலை உயர்ந்தன

19

சென்னை: ஆவின் நிறுவன தயாரிப்பில் அதிகம் விற்பனையாகும், 67 வகை பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கான இனிப்புகளின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஆவின் நிறுவனம் வாயிலாக நாள்தோறும், 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதிலிருந்து தயிர், வெண்ணெய், நெய், பனீர் உள்ளிட்ட, 150க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

மாநிலம் முழுதும் உள்ள ஆவின் நேரடி விற்பனை நிலையங்கள், சில்லரை விற்பனை நிலையங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் வாயிலாக, அவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆவினில் கடந்த நான்கு மாதங்களாக பலவகை பால் பொருட்களின் உற்பத்தி குறைக்கப்பட்டது. இதனால், குஜராத் அமுல், கர்நாடகா நந்தினி உள்ளிட்ட பிற மாநில பால் பொருட்களின் விற்பனை தமிழகத்தில் அதிகரித்தது.

இந்நிலையில், முக்கியமான, 67 வகையான பால் பொருட்களின் விலையை முன்னறிவிப்பு இன்றி, ஆவின் நிறுவனம் திடீரென உயர்த்தி உள்ளது. இன்று முதல் புதிய விலை அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நுகர்வோர் அதிகம் விரும்பி பயன்படுத்தும் நெய் விலை லிட்டருக்கு 80 ரூபாய், 500 கிராம் சமையல் வெண்ணெய் விலை 40 ரூபாய், பால் கோவா 250 கிராம், 30 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாகவே, பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக, ஆவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆவின் வாயிலாக, ஆண்டுதோறும் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி நேரத்தில், பண்டிகை கால சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை நடந்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும், 100 கோடி ரூபாய்க்கு மேல் இலக்கு நிர்ணயம் செய்யப்படும். தனியார் சமையல் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பலவகை இனிப்புகள் தயாரிக்கப்படும். மூலப்பொருட்கள் விலை உயர்வை காரணம் காட்டி, நடப்பாண்டு பண்டிகை கால சிறப்பு வகை இனிப்புகள் விலையும் உயர்ந்துள்ளது.

அதன்படி, 250 கிராம் நெய் அல்வா 110 ரூபாயில் இருந்து 125 ரூபாய்க்கும், நட்ஸ் அல்வா 180ல் இருந்து 200 ரூபாய்க்கும், நெய் பாதுஷா 180 ரூபாயில் இருந்து 205 ரூபாய்க்கும், காஜு பிஸ்தா ரோல் 310 ரூபாயில் இருந்து 340 ரூபாய்க்கும், காஜு கத்லி 250 ரூபாயில் இருந்து 280 ரூபாய்க்கும் விற்கப்பட உள்ளன. கார வகைகளில், 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட, 200 கிராம் பட்டர் முறுக்கு விலை 95 ரூபாய்க்கும், மிக்ஸர் 100 ரூபாயில் இருந்து 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன. தீபாவளி இனிப்பு வகைகள் விலை உயர்வால், ஆவினுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து வரும் ஆர்டர்கள் குறையும் வாய்ப்புள்ளது.

Latest Tamil News
இதுகுறித்து, ஆவின் நிர்வாக இயக்குநர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கை: பால் உற்பத்தியாளர் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலும், நுகர்வோருக்கு தரமான பால் பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதிலும், ஆவின் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போதைய சந்தை சூழலில், தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் பிற மாநில கூட்டுறவு பால் நிறுவன பொருட்களின் விலை மற்றும் உற்பத்தி செலவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளை கருதி, ஆவின் பால் பொருட்களின் விலையில், குறைந்த அளவிலான மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

விலை உயர்விற்கு பின்னரும், பிற கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவன பொருட்களுடன் ஒப்பிடுகையில், ஆவின் பால் பொருட்களின் விலை தொடர்ந்து குறைவாகவே உள்ளது. இந்த நடவடிக்கை எவ் வித லாப நோக்கமும் இன்றி, உற்பத்தி செலவுகளை ஈடுசெய்வதற்கும், சந்தையில் ஆவின் பொருட்களின் போட்டித் தன்மையை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கும் அவசியமானது.

இந்த விலை உயர்வால் கிடைக்கும் வருவாயில், 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகை, பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக வழங்கப்படும். எனவே, பால் உற்பத்தியாளர்களின் நலன் கருதி, பொது மக்கள் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை தொடர்ந்து வாங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement