ஆசம் கான் பல்கலையின் ரூ.1,170 கோடி சொத்து முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை
நமது நிருபர்
உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரில் சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆசம் கானுக்கு சொந்தமான முகமது அலி ஜவுஹர் பல்கலை அமைந்துள்ளது. இந்தத் தனியார் பல்கலையின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1,170 கோடி. இதன் நிலம் மற்றும் 59 கட்டடங்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையின் லக்னோ மண்டல அலுவலகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பல்கலை வளர்ச்சிக்காக அரசு நிதி, கட்டுமானப் பொருட்கள் மற்றும் பிற பொது வளங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. வளாகத்தின் கட்டுமானச் செலவில் கணிசமான பகுதிக்கு முறையான ஆதாரங்கள் மூலம் கணக்கு காட்ட முடியவில்லை. ரூ. 426.46 கோடி குற்றச்செயல் மூலம் கிடைத்துள்ளது. மொத்த செலவில் ரூ.72.63 கோடிக்கு மட்டுமே ஆதாரங்கள் உள்ளன என அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
முன்னாள் அமைச்சரான ஆசம் கான் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பொதுப்பணித் துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைக்கு வந்த அரசு நிதியை இந்தத் தனியார் பல்கலைக்கழகக் கட்டுமானத்திற்குத் திசை திருப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பறித்தது, 34 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பல்கலை வளாகத்தை அமைத்தது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட எப்ஐஆர் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பல்கலையை நிர்வகிக்கும் ஆசம் கானின் 'மௌலானா முகமது அலி ஜவுஹர் அறக்கட்டளைக்கு' ஒப்பந்ததாரர்கள் மூலம் போலியான நன்கொடைகள் பெறப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வருமான வரித்துறை ஏற்கனவே இந்த அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்துள்ளது.
மேலும்
-
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தம்; தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
-
அமெரிக்காவில் முறைப்படி தடம் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு அமைப்பு: தவறான பிரசாரங்களை முறியடிக்க திட்டம்!
-
ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை: ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்
-
ஏஐ பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்ய முடியும்; ஸ்ரீதர் வேம்பு
-
மின் இணைப்பு சரண்டர் செய்தவர்களுக்கு ரூ. 12.5 கோடி நிலுவை! 5 வருடமாக மின்வாரியம் இழுத்தடிப்பு
-
ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்; தயார் நிலையில் அமெரிக்கப்படைகள்