வரதட்சணை புகார் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் போலீசார் சரியாக விசாரிக்காததால் கோர்ட் உத்தரவு
சென்னை: ஈரோட்டில் கணவருக்கு எதிராக, அவரது மனைவி அளித்த வரதட்சணை புகாரை, போலீசார் சரியாக விசாரிக்கவில்லை என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டை சேர்ந்தவர் பி. யுதே. இவர், தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக அளித்த புகாரை, காவல்துறை முறையாக விசாரிக்காமல், விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த, குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரியும், வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் வி.சுப்பிரமணியன் ஆஜராகி, ‘‘திருமணத்தின்போது, 200 சவரன் தங்க, வைர மற்றும் வெள்ளி நகைகள் வழங்கியும், கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். போலி கையெழுத்திட்டு, கணவரின் குடும்பத்தினர் நடத்திய நிறுவனத்தின் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்ததாக கடிதம் அளித்து, மனுதாரர் வசமிருந்த 4,500 பங்குகளை மாற்றினர். ராஜினாமா கடிதத்தின் உண்மைத்தன்மையை, போலீசார் சரி பார்க்கவில்லை,’’ என்றார்.
காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.இந்திரா, வழக்கறிஞர் வி.ஸ்ரீமதி ஆஜராகி, ‘‘விசாரணை முடிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற முடியாது,’’ என்றனர்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ராஜினாமா கடிதத்தின் உண்மைத்தன்மை, பங்குகள் மாற்றப்பட்ட நடைமுறை மற்றும் தொடர்புடைய நிறுவன ஆவணங்கள் குறித்து, முறையான விசாரணை நடத்தப்படவில்லை. முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்படாததும், விசாரணையில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இருப்பதும், அதன் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, ஈரோடு போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது. வழக்கை ஈரோடு சி.பி.சி.ஐ.டி., எந்தவித அழுத்தங்களுக்கும் இடம் அளிக்காமல், நியாயமாக விசாரிக்க வேண்டும். விசாரணையை ஐந்து மாதங்களுக்குள் முடித்து, நீதிமன்றத்தில் விரிவான இறுதி அறிக்கையை, தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 2 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை