கரையை கடக்கத் துவங்கியது அர்னாப் புயல்! அடுத்த 3 மணி நேரம் அதிதீவிரம்

1

- நமது நிருபர் -

வங்கக்கடலில் உருவான அதி தீவிர புயலான 'அர்னாப்', ஏனாம் அருகே பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே நள்ளிரவு கரையை கடக்க துவங்கியது. அதிகாலை 4 மணிக்கு புயலின் மையப்பகுதி கரையை நெருங்கியுள்ள நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு புயல் கரையை கடக்கும் நிகழ்வு நிகழும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள 'அர்னாப்' புயல், மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருகிறது. இதன் வெளிப்பகுதி நிலப்பரப்பைத் தொட்டுள்ள நிலையில், புயல் முன்கூட்டியே கரையை கடக்க உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அர்னாப் புயல், கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 20 கி.மீ வேகத்தில் தீவிரமடைந்துள்ளது. இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் வடமேற்கு நோக்கி திரும்பும் என கணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 28 முற்பகலில் புயல் கரையை கடக்கும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் வேகம் அதிகரித்துள்ளது.

புயலின் வெளிப்பகுதி தற்போது கரையை கடக்க துவங்கியுள்ளது. அக்டோபர் 28 அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள், பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகே மிகத் தீவிரப் புயலாக, புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்திலும், இடையிடையே 140 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

கொட்டித் தீர்க்கும் கனமழை:



புயலின் தாக்கத்தால் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் ஏனாமில் அக்டோபர் 27, 28 தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை கொட்டித் தீர்க்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் அக்டோபர் 28, சத்தீஸ்கரில் 28, 29, கிழக்கு உத்தரபிரதேசத்தில் அக்டோபர் 29ல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

விமான, ரயில் சேவைகள் பாதிப்பு:



மோசமான வானிலை காரணமாக விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா இடையேயான ஏர் இந்தியா விமான சேவைகள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் விமான நிலவரத்தை உறுதி செய்துகொண்டு, போதிய நேரத்துடன் விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு, தெற்கு கடற்கரை ரயில்வே அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படவிருந்த 53 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:



புயல் பாதிப்பு இருக்கும் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் பகுதியிலேயே முகாமிட்டு பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு உணவு கிடைக்க, உலர் ரேஷன் பொருட்கள் பயனாளிகளின் வீட்டு வாசலுக்கே சென்று நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு:



புயல் நிலவரம் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வதந்திகளையோ, உண்மைக்கு மாறான கணிப்புகளையோ வெளியிடக் கூடாது என ஒடிசா அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ​கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையினர் முழு வீச்சில் களமிறக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Advertisement