மாயாற்றில் வெள்ளம்; வாகனங்கள் செல்ல தடை

புன்செய்புளியம்பட்டி: மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் ஆகிய வனகிராமங்கள் உள்ளன. இவற்றில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள இக்கிராம மக்கள் மாயாற்றில் நீர் குறைவாக செல்லும் சமயங்களில் நடந்தே ஆற்றை கடந்து செல்வர். வெள்ளப்பெருக்கு காலங்களில் வாகனம் மற்றும் பரிசலில் பயணிப்பது வழக்கம்.
ஒரு வாரத்துக்கும் மேலாக நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்வதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மாயாற்றில் மழை நீர் செந்நிறத்தில் சீறிப்பாய்கிறது. இதன் காரணமாக வன கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றை கடந்து செல்கின்றனர்.
மாயாற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தெங்குமரஹாடா, கல்லம்பாளையம், அல்லிமாயாறு, சித்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு தற்போது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாயாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும் வாகனங்கள் மற்றும் பரிசலில் ஆற்றை கடக்கவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தெங்குமரஹாடாவில் சாகுபடி செய்த வாழை, பூசணிக்காய் போன்ற விவசாய விளைபொருட்கள் சந்தைப்படுத்த முடியாமல் தேக்கமடைந்துள்ளது.

Advertisement