காட்டிநாயனப்பள்ளி முருகர் கோவிலில் திருமணங்களுக்கு கூடுதல் வசூல் புகார்
கிருஷ்ணகிரி: காட்டிநாயனப்பள்ளி முருகர் கோவிலில், திருமணங்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியில், தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கின்றனர்.
கிருஷ்ணகிரி அடுத்த பெத்தனப்பள்ளியை சேர்ந்த பழ வியாபாரி ரவி, 55. இவரது மகன் விண்ணரசன், 26, பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கும் ஆலப்பட்டியை சேர்ந்த சிவசங்கரி, 26 என்ற பெண்ணுக்கும் கடந்த, 25ல், காட்டிநாயனப்பள்ளி முருகர் கோவிலில் திருமணம் நடந்த நிலையில், 6,000 ரூபாய் செலுத்தியே ஆக வேண்டுமென கோவில் நிர்வாகத்தினர் பணம் வசூலித்துள்ளனர்.இது குறித்து, பழ வியாபாரி ரவி கூறியதாவது:
மகனின் திருமணத்தை எளிய முறையில், முருகர் கோவிலில் நடத்த முயன்றேன். இதற்காக மணமக்களின் விபரங்கள் உள்ளிட்ட, 5 ஆவணங்களை இ-சேவை மையத்தில் பதிவு செய்து, கடந்த, 25ல், திருமணம் நடத்த பதிவு செய்தேன். அதற்கு, 70 ரூபாய் கட்டணமாக பெற்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவிலில் திருமணம் செய்ய, 500 ரூபாய் கட்டினால் போதும், அர்ச்சகர்களுக்கு அவரவர் விருப்பப்படி பணம் கொடுக்கலாம் என்றனர். அதை நம்பி அங்கு சென்றபோது, கனமழையால் அலுவலர்கள் வரவில்லை, திருமணத்திற்கு, 5,500 ரூபாய், அர்ச்சகர்களுக்கு, 500 ரூபாய் செலுத்தியே ஆக வேண்டும் எனக்கூறினர். தொடர்ந்து அருகில் இருந்தவர்களிடம் பணத்தை கடனாக பெற்று திருமணத்தை நடத்தி வந்தோம். ஏழை, எளிய மக்கள் குறைந்த செலவில் இறைவனின் ஆசீர்வாதத்தோடு திருமணத்தை கோவிலில் நடத்த திட்டமிடுகிறோம். ஆனால், இங்கும் கட்டாய வசூலில் ஈடுபட்டு, எங்களிடம் பணம் பறிக்கின்றனர். வாங்கிய பணத்திற்கு ரசீது கேட்டபோது, 2,000 ரூபாய்க்கு ரசீது கொடுக்கின்றனர். இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து கிருஷ்ணகிரி ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில் ஆய்வாளர் ராஜா கூறுகையில், ''இதுவரை இதுபோன்ற புகார்கள் வரவில்லை. இருப்பினும், இது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி