உலக வெள்ளிப் பதக்கம்... 34 தேசிய பதக்கங்கள்... கனவோடு சீறிப் பாயும் புதுச்சேரி ஸ்பீடு ஸ்டார்
அண்மையில் தென் அமெரிக்க கண்டத்தின் பராகுவே நாடு... உலகளவில் சிறந்த ஸ்கேட்டிங் வீரர்கள் ஒரே கூரையின் கீழ் கூடி நின்ற தருணம் அது. 18 வயதிற்குட்பட்டோருக்கான ஸ்பீட் ஸ்கேட்டிங் ரோட் ஒன்லேப் பிரிவு போட்டிக்கான விசிலடிபட்டதும், காற்றுடன் போட்டியிட்டு மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தனர் ஸ்கேட்டிங் வீரர்கள்.
அதில், வெறும் 0.025 வினாடி இடைவெளியில் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி, இந்தியாவிற்கும் நம் புதுச்சேரி மண்ணிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார் புதுச்சேரியை சேர்ந்த 18 வயது ஸ்கேட்டிங் வீரர் லோக்நாத்.
பராகுவேயில் உலக சாதனை படைத்து விட்டு புதுச்சேரி திரும்பிய லோக்நாத், தன் வெற்றிக் கதையையும் எதிர்காலக் கனவுகளையும் நம்மிடம் உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டதிலிருந்து...
500 மீட்டர் பந்தயத்தை 30.41 வினாடில கடந்து வெள்ளி ஜெயிச்சிருக்கீங்க... அந்தத் திரில்லான தருணம் பத்தி சொல்லுங்களேன்?
வார்த்தைகளால விவரிக்க முடியாத அனுபவம் அது. 500 மீட்டரை 30.419 வினாடில நான் தொட்டப்போ, எனக்கு முன்னாடி 30.394 வினாடியில் தொட்டு தங்கப் பதக்கம் வென்றது நம்ம கேரளாவைச் சேர்ந்த அனிருதன். எங்க ரெண்டு பேருக்கும் இடைப்பட்ட வித்தியாசம் வெறும் 0.025 வினாடி தான்.
கண் இமைக்கிற நேரத்துக்கும் குறைவான இடைவெளி. தங்கம் கைநழுவினாலும், இந்தியா சார்பா கலந்துகிட்ட இன்னொரு சகோதரன் தங்கம் வென்றதும், நான் வெள்ளிப் பதக்கம் வென்றதும் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்துச்சு.
இந்த உலக சாம்பியன்ஷிப் மேடைக்கான கதவு உங்களுக்கு எப்படித் திறந்தது?
திடீர்னு கிடைச்ச வாய்ப்பு இல்ல இது. நொய்டாவில் நடந்த தேசிய அளவிலான தகுதிச் சுற்றுல மிகக் கடுமையான போட்டி இருந்தது. அதுல சிறப்பா செயல்பட்டு வெற்றி பெற்றதால் தான், இந்திய அணியில் இடம் கிடைச்சு உலக ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வானேன்.
இப்ப 34 தேசிய பதக்கங்கள் ஆரம்ப கால பயிற்சிகள் எப்படி இருந்தது?
சின்ன வயசுல விளையாட்டுக்காக ஸ்கேட்டிங் ஷூ மாட்டுனவன் நான். 5 வயசுல இருந்து தினமும் விடாமுயற்சியோட பயிற்சி எடுத்தேன். அதோட பலனா, 11 வயசுல பள்ளிகளுக்கு இடையிலான தேசியப் போட்டியில என் முதல் கோல்ட் மெடலை ஜெயிச்சேன். அதுக்கப்புறம் எல்லாமே ஏறுமுகம் தான். சி.பி.எஸ்.இ போட்டிகள், ரோலர் ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா போட்டிகள்னு இதுவரைக்கும் 14 தங்கம், 13 வெள்ளி, 7 வெண்கலம்னு மொத்தம் 34 தேசிய பதக்கங்களை வெல்ல முடிஞ்சது.
களத்தில் உங்களோட மிகப்பெரிய பிளஸ் என்னனு நினைக்கிறீங்க?
சந்தேகமே இல்ல... என்னோட அசுர வேகம்தான் என் மிகப்பெரிய பலம். ட்ராக்கில் இறங்கிட்டா அந்த வேகத்தை மட்டும்தான் நான் முழுசா நம்புவேன்.
ஸ்போர்ட்ஸ் ஒரு பக்கம்... படிப்பு இன்னொரு பக்கம்... அடுத்த பிளான் என்ன? இப்போதான் பிளஸ் 2 முடிச்சிருக்கேன். அடுத்து பிசியோதெரபி படிக்கிறதுக்காக காத்திருக்கேன். விளையாட்டோடு சேர்த்து படிப்பையும் சமமா கொண்டு போறதுதான் என் விருப்பம்.
இந்த அளவுக்கு சாதனை படைக்க உங்களுக்குப் பின்னாடி இருந்து இயங்குற அந்த சக்தி யார்?
லாஸ்பேட்டை கென்னடி கார்டன், அபிமன்யூ வீதியில் இருக்குற என் வீடுதான் என்னோட எனர்ஜி பூஸ்டர். என் அப்பா அருண் பிரசாத், அம்மா சக்திவெண்ணிலா ரெண்டு பேரும் கொடுக்கிற அளப்பரிய ஆதரவுதான் என் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்.
அவங்களோட சேர்ந்து என் பயிற்சியாளர்கள் சிவராஜ், ராஜ்குமார் ஆகிய ரெண்டு பேரும் என் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் அசைக்க முடியாத பக்கபலமா நிற்கிறாங்க.
அடுத்த இலக்கு என்ன..
அடுத்த வருஷம் ஆசிய ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கப்போகுது. அதுல இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் வெல்லணும்ங்கிறதுதான் என் முதன்மை இலக்கு. அதைவிட முக்கியமா, ஸ்கேட்டிங் விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான பரிசீலனைகள் நடந்துட்டு வருது.
அது நிறைவேறும் பட்சத்தில், ஒலிம்பிக் அரங்கில் இந்தியக் கொடியை ஏந்திப் பிடிச்சு பதக்கம் வெல்லணும்... அதுதான் என்னோட லட்சியக் கனவு.
நம்பிக்கை பொங்கும் கண்களோடும், வேகமும் விவேகமும் நிறைந்த பேச்சோடும் விடைபெற்ற லோக்நாத்தின் அனைத்து கனவு விரைவில் மெய்ப்பட வாழ்த்துகளை தெரிவிப்போம்.
மேலும்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
-
மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக தீர்வு காண வாரியம் உத்தரவு
-
தீபாவளிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை அமைச்சர் விக்னேஷ் பேட்டி