தீபாவளிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை அமைச்சர் விக்னேஷ் பேட்டி

சென்னை: ‘‘தீபாவளிக்கு மது விற்பனை தொடர்பாக இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை,’’ என, மது விலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில், இன்று (நவ.,1) அவர் அளித்த பேட்டி:

தீபாவளிக்கு அரசு மதுக்கடைகளில், கூடுதலாக விற்பனை செய்ய, இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை. எப்போதும் போல வழக்கமாக நடக்கும் விற்பனை இருந்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது. மதுக்கடைகளில், 140 ரூபாய்க்கு விற்ற மதுபானத்திற்கு, பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கிக் கொண்டு, பாட்டிலை திரும்ப தந்தால், 10 ரூபாய் திரும்ப கொடுக்கப்பட்டது. கூடுதலாக பெறப்பட்ட, 10 ரூபாய் கட்சி நிதிக்கு சென்றது. இதைத்தான் கரூரில் முதல்வர் பாட்டாக பாடினார்.

தமிழகத்தில், 717 மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. கடைகள் மூடப்பட்டால், மது குடிப்போர் எவ்வளவு துாரமாக இருந்தாலும், வேறு கடைக்கு சென்று குடிக்கின்றனர். இதனால், கூட்டம் அதிகமாகி உள்ளது. சில இடங்களில், டாஸ்மாக் கடை, பார் எனப்படும் மதுக்கூடம் போன்றவை இடையூறாக இருப்பதாகக் கூறி, பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். அந்த கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. மேலும், மதுக்கடைகளை மூடுவது குறித்து, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதே நேரத்தில், எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement