குடிநீருக்கு செயற்கைத் தட்டுப்பாடு

பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில் கணக்கில் காட்டப்படாமல் செல்லும் குடிநீரால் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

விசைத்தறி, கறிக்கோழி பண்ணைகள், சாய ஆலைகள், பனியன் நிறுவனங்கள் என பல தொழில்களால் பல்லடம் வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில் வளர்ச்சிக்கு இணையாக மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.

அத்திக்கடவு, பில்லுார், மேட்டுப்பாளையம் கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டாலும் வட்டாரம் முழுவதும் தட்டுப்பாடு நீடிக்கிறது. பல லட்சம் லிட்டர் குடிநீர் கணக்கில் வராமல் முறைகேடாக செல்வதே இதற்கு காரணம். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஊராட்சியிலும் முறைகேடாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து தடுத்தால் தற்போது வழங்கப்படும் குடிநீரே போதுமானதாக இருக்கும்.

தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லாததால் பல்லடத்தில் வறட்சி ஏற்பட்ட நிலையில், சமீபத்திய மழை ஓரளவு கைகொடுத்துள்ளது. எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க கணக்கில் வராமல் செல்லும் குடிநீரை தடுப்பதே தீர்வு.

Advertisement