இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்? முன்னிலை பெற்றும் நெதன்யாகுக்கு பெரும்பான்மை இல்லை

​ஜெருசலேம்: இஸ்ரேல் பார்லி., தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி முன்னிலை வகித்தாலும் ஆட்சி அமைக்கத் தேவையான மேஜிக் நம்பரை எட்ட முடியாததால் பெரும் அரசியல் குழப்பம் நிலவுகிறது.

இஸ்ரேல் பார்லிமென்டுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 120 இடங்களில், 61 இடங்களைப் பிடிக்கும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சி அமைக்க முடியும். 93 சதவீத ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், தற்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

@block_B@

தற்போதைய நிலவரம்:



நெதன்யாகு கூட்டணி: 53 இடங்கள்

​காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி: 48 இடங்கள்

அரபு கட்சிகள்: 19 இடங்கள்block_B

​ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவை என்ற நிலையில், நெதன்யாகு அணிக்கு மேலும் 8 எம்.பி.,க்கள் தேவைப்படுகிறது. அதேநேரம் எதிர்க்கட்சி கூட்டணிக்கும் போதிய பலம் இல்லை. இதனால் 19 இடங்களைக் கைப்பற்றியுள்ள அரபு கட்சிகளே ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் 'கிங் மேக்கர்' அந்தஸ்தைப் பெற்றுள்ளன. ஆனால், அரபு கட்சிகள் எந்த கூட்டணிக்கும் ஆதரவளிக்கத் தயாராக இல்லை.

​நெதன்யாகு ஆவேசம்:



இந்நிலையில், பிரதமர் நெதன்யாகு அளித்த பேட்டியில், 'அரபு கட்சிகள் தேர்தலில் முறைகேடு செய்து வாக்குகளை திருடிவிட்டன. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அரபு கட்சிகளின் தயவோடு அமையவிருக்கும் அரசை ஒருபோதும் ஏற்க முடியாது' என கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு கடும் மறுப்பு தெரிவித்துள்ள அரபு கூட்டணிக் கட்சிகள், 'தோல்வி பயத்தால் நெதன்யாகு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசுகிறார்' என பதிலடி கொடுத்துள்ளன.

மீண்டும் தேர்தல்?



ராணுவ வீரர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் செலுத்திய தபால் ஓட்டுகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. இதிலும் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அல்லது கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், இஸ்ரேலில் விரைவில் மீண்டும் ஒரு தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement