பெண்ணாடம் பேரூராட்சியில் விளையாட்டு மைதானம் அமைக்க இளைஞர்கள் எதிர்பார்ப்பு

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பெண்ணாடம் பேரூராட்சி 15 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு பேரூராட்சி வார்டு பகுதிகளில் விளையாட்டு மைதானம் இல்லை.

இதனால் இப்பகுதி இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வயல்வெளி, கோடை காலங்களில் ஏரி, குளங்களில் விளையாடும் நிலை உள்ளது. விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

கடந்த தி.மு.க., ஆட்சியில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு இளைஞர்கள், மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில், கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கேரம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஆனால் உபகரணங்களை பயன்படுத்த விளையாட்டு மைதானம் வசதி இல்லாததால் உபகரணங்கள் பாழாகி வருகிறது.

எனவே, பெண்ணாடம் பேரூராட்சி இளைஞர்கள், மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் வகையில் மைதானம் அமைக்க மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement