ஸ்டேஷனில் இருந்த அலைபேசியை விற்ற ஏட்டு மீது வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த அலைபேசியை விற்ற ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கேரள மாநிலம் காசர்கோடு அருகே சந்தேரா என்ற பகுதியை சேர்ந்த வெளிமாநில தொழிலாளி ஒருவருக்கு ரோட்டில் கிடந்த அலைபேசி கிடைத்தது. அவர் சந்தேரா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். பணியில் இருந்த ஏட்டு பைஜூ அதை வாங்கி வைத்தார். அலைபேசி கிடைத்த விபரம் அங்குள்ள பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் காணாமல் போன அலைபேசி சந்தேரா அருகே ராமன்தளி பகுதியைச் சேர்ந்த சுபத்திரா நாயருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரது மகன் சந்தேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தபோது அங்கு அந்த அலைபேசி இல்லை. இதுபற்றி போலீசார் சைபர் கிரைம் போலீசின் உதவியை நாடினர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் சந்தேரா அருகே நீர்ச்சால் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அலைபேசியை பயன்படுத்தி வருவது தெரியவந்தது . போலீசார் அவரை அழைத்து விசாரித்த போது ஏட்டு பைஜூதான் தனக்கு இந்த அலைபேசியை விற்பனை செய்தார் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து ஏட்டு பைஜு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement