செயின்ட் ஜோசப் கல்லுாரியில் வரும் 31ம் தேதி கல்விக்கடன் வழங்கும் முகாம்
கடலுார்: செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும் 31ம் தேதி மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடக்கிறது.
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியைத் தடையின்றித் தொடரவும், கல்விக் கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்களைப் பெற்று பயன்பெற, புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கலையரங்கத்தில், வரும் 31ம் தேதி காலை 10.00 மணி முதல் மாபெரும் கல்விக் கடன் முகாம் கலெக்டர் தலைமையில் நடக்கிறது. இதில் முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளும் பங்கேற்கின்றனர்.
கடலுார் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவ, மாணவியர்கள், கடலுார் மாவட்டத்திற்குள்ளோ, பிற மாவட்டங்களிலோ, பிற மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ உயர்கல்வி பயின்று வந்தாலும் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக மத்திய அரசின் வித்யாலட்சுமி (http://pmvidyalaxmi.co.in) கல்விக் கடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள், கல்விக் கடன் விண்ணப்பத்திற்குத் தேவையான ஆவணங்களின் நகல்களை கீழ்காணும் சரிபார்ப்புப் பட்டியலின்படி எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வித்யாலட்சுமி கல்விக் கடன் இணையதள விண்ணப்ப நகல், மாணவரின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பான் அட்டை (இருந்தால்), இருப்பிடச் சான்று, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருமானச்சான்று, மாணவரின் கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், கல்லுாரி சேர்க்கை ஆணை அல்லது சேர்க்கை உறுதிப்படுத்தும் ஆவணம், கல்விக் கட்டண விவரப் பட்டியல், படிப்புக் காலம் மற்றும் செலவின விவரங்கள், நுழைவுத் தேர்வு மதிப்பெண் அல்லது தரவரிசை விவரங்கள் (பொருந்தினால்), வங்கிக் கணக்கு விவரங்கள், புகைப்படம் (பாஸ்போர்ட்அளவில்) ஆகியவற்றின் நகல்களை எடுத்துவர வேண்டும்.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் கல்வி பயில உள்ளவர்கள் அல்லது பயின்று வருபவர்கள், மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கலந்து கொண்டு பயன் பெறலாம். எனவே, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கல்விக் கடன் பெற விரும்பும் தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வரும் 31ம் தேதி காலை 10.00 மணிக்கு நடைபெறும். மாபெரும் கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்
-
போலி நகையை அடகு வைக்க முயன்றவர் கைது
-
இந்தியாவின் கடல்சார், சரக்குப் போக்குவரத்துத் துறைக்கு பெரும் உத்வேகம்; பிரதமர் மோடி
-
ஸ்டேஷனில் இருந்த அலைபேசியை விற்ற ஏட்டு மீது வழக்கு
-
விபத்துகள் தவிர்க்க முனைப்பு அவசியம்
-
பெண்ணாடம் பேரூராட்சியில் விளையாட்டு மைதானம் அமைக்க இளைஞர்கள் எதிர்பார்ப்பு
-
தந்தை, மகனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு