வானுார் அருகே நடந்த கொலை வழக்கில் 6 பேர் கைது: பணம் தர மறுத்ததால் தீர்த்து கட்டினோம்
ஒரு அக்யூஸ்டு ேஷக் தாவூது படம் வர வேண்டியுள்ளது. வந்ததும் அனுப்புகிறேன்...
வானுார்: ‘பணம் தர மறுத்தால் தீர்த்து கட்டினோம்’ என வானுார் அருகே நடந்த கொலை வழக்கில் கைதான 6 பேர், போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
புதுச்சேரி, ஜீவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீசிங்குமார் (எ) ராஜேந்திரகுமார், 46; கொலை உள்ளிட்ட சில வழக்குகள் உள்ள இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், 26ம் தேதி நள்ளிரவு புதுச்சேரி அடுத்த தமிழகப்பகுதியான பூத்துறை செல்லும் சாலையில், நான்கு பேருடன் மது அருந்திக்கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்து வெட்டிக் கொலை செய்தது.
இதுகுறித்து ஆரோவில் போலீசார் கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பணப் பிரச்னையில் ஒரு கும்பல் அவரை கொலை செய்த தெரிய வந்தது.
இதற்கிடையே ராஜேந்திரகுமாரை, கொலை செய்ததாக வில்லியனுார் அடுத்த சேந்தநத்தம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த பழனி மகன் கிருஷ்ணகுமார், 31; முத்தியால்பேட்டை முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஹரிகாந்த் (எ) கந்தசாமி, 28; குண்டுபாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் மணிகண்டன், 33; கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா மகன் ஷேக் தாவூது, 28; புதுச்சேரி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த ராஜன் மகன் விக்கி (எ) விக்னேஷ், 32; ஆகிய 5 பேர் ஆரோவில் போலீசில் சரணடைந்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் வாக்குமூலம் அளித்தது குறித்து போலீசார் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட ராஜேந்திரகுமார், புதுச்சேரி கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக்கல்லுாரி எதிரில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள இடத்தை வாங்கி, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இதையறிந்த ஏனாம் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி மர்டர் மணிகண்டன், முதலியார்பேட்டையைச் சேர்ந்த சுந்தர் என்பவர் மூலம், தனது கூட்டாளிகளை ஏவி, 2 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.
இதற்கு பயந்த மோகன், அந்த கும்பலுக்கு பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், ராஜேந்திரகுமாருக்கு, பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் முக்கிய நபர் ஒருவர், ஆதரவாக செயல்பட்டு பணத்தை கொடுக்க வேண்டாம் எனக்கூறியுள்ளார். தனக்கு பக்கபலமாக ஒருவர் இருந்ததால், ராஜேந்திரகுமார் ரவுடிக்கு பணம் தர மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பிரபல ரவுடி, கிரீன் சிக்னல் கொடுத்ததால், சுந்தர் தலைமையிலான அவரது கூட்டாளிகள், ராஜேந்திரகுமாரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்தாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட 5 பேரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புதுச்சேரி எல்லைப் பிள்ளைச்சாவடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிநீலகண்டன் மகன் புண்ணியமூர்த்தி, 33; என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து எட்டியாஸ் கார் மற்றும் நான்கு வீச்சருவாளை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் சுந்தர் உட்பட தலைமறைவாக உள்ள சிலரைத் தேடி வருகின்றனர். மேலும் சிறையில் உள்ள மர்டர் மணிகண்டனிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
லைன் பார்த்தவர் சிக்கினார்
கடந்த 26ம் தேதி புதுச்சேரி கருவடிக்குப்பம் தனியார் பள்ளியில் பேட்மிட்டன் விளையாடி விட்டு, ராஜேந்திரகுமார் தனது நண்பர்களுடன், காரில் புறப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையம் பகுதிக்கு மது வாங்குவதற்கு கார் சென்றுள்ளது. அங்கு மதுவாங்கிக் கொண்டு, பூத்துறை சாலையில் அவர்கள் மது அருந்தியுள்ளனர். புதுச்சேரியில் ராஜேந்திரகுமார், அவரது நண்பர்களுடன் புறப்பட்டது முதல் மதுவாங்கிக்கொண்டு பூத்துறை சாலைக்கு சென்று அமர்ந்து மது அருந்தும் வரை ரூட் பார்த்து கொலையாளிகளுக்கு தகவல் கூறிய புண்ணியமூர்த்தியையும், இந்த வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
நண்பரின் காரும் சிக்கியது
கொலை செய்வதற்கு ‘ஸ்கெட்ச்’ போடுவதற்கு முன்பாக கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமார், அரும்பார்த்தபுரத்தில் உள்ள தனது நண்பரை சந்தித்துள்ளார். அப்போது, எனது நண்பர்களுடன் டூர் செல்லவதற்கு, கார் கொடுக்கும் படி கேட்டுள்ளார். இதை நம்பிய அவரது நண்பரும், வேறொரு நபரின் பெயரில் உள்ள ஒரு வெள்ளை நிற எட்டியாஸ் காரை கொடுத்து அனுப்பியுள்ளார். அந்த காரை பயன்படுத்தி இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
புதுடெக்னிக்
தமிழக பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை போலீசார் விரும்புவது கிடையாது. அப்படி குற்ற சம்பவங்கள் நடந்தால் தமிழக போலீசார் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவார்கள். இருப்பினும், சில இடங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் பிடிக்கும் போது, அவர்கள் தப்பிக்க முயற்சி செய்கின்றனர். அப்போது அவர்கள் கீழே விழுந்து, கை, கால் உடைந்து மாவுக்கட்டு போடும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் ராஜேந்திரகுமார் கொலை வழக்கில், எங்களுக்கு கை, கால்கள் நன்றாகத்தான் இருக்கிறது. தங்களுக்கு ஏதாவது நடந்தால் ஆரோவில் போலீசார் தான் பொறுப்பு என கைதுக்கு முன்பாகவே வீடியோ வெளியிட்டு 5 பேரும் ஆரோவில் போலீசில் சரணடைந்துள்ளனர். கொலையாளிகள் வீடியோ வெளியிட்டு, சரணடைந்த ‘புதுடெக்னிக்’ சம்பவத்தால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மீண்டும் அபகரிப்பா
புதுச்சேரியில் ஏற்கனவே பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றவர்களின் வீடுகள், நிலங்கள் அபகரிப்பது கடந்த 1990ம் ஆண்டு நடந்தது. இந்த அபகரிப்பு சம்பவங்கள் உச்சத்தை எட்டியதால், இது தொடர்பாக பிரான்ஸ் அரசுக்கு புகார்கள் சென்றது. இதன் காரணமாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
அதன் பிறகு பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் நிலங்கள் அபகரிப்பது படிப்படியாக குறைந்தது. இந்த வழக்கிலும், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் நிலமாக உள்ளது. பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் நிலத்தை அபகரிக்கும் அட்டகாசத்தை ரவுடி கும்பல் மீண்டும் துவக்கியுள்ளது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் மீண்டும் தலைதுாக்கியுள்ளது. இதற்கு புதுச்சேரி அரசும், போலீசாரும் மவுனமாக காக்காமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மாறி மாறி கடிதம்
கொலை செய்யப்பட்ட ராஜேந்திரகுமார், கடந்த சில மாதம் முன்பு தன்னை கொலை செய்ய சிறையில் உள்ள பிரபல ரவுடி திட்டமிட்டு இருப்பதாகவும், கொலை செய்யப்பட்டால் அவரே காரணம் என கடிதம் எழுதி கவர்னர், டி.ஜி.பி., உள்ளிட்டோருக்கு அனுப்பி இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக கிருமாம்பாக்கம் இடத்தை கைப்பற்றுவது தொடர்பாக ரவுடிகள் மூலம் கட்டப்பஞ்சாயத்து நடத்தப்படுவதாகவும், இதன் பின்னணியில் கொலைகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், புதுச்சேரியில் நடக்க உள்ள கொலை உள்ளிட்ட சம்பவத்திற்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று சிறையில் உள்ள பிரபல ரவுடி மர்டர் மணிகண்டன் கடந்த 2 மாதங்களுக்க முன்பு டி.ஐ.ஜி.க்கு அனுப்பிய கடிதம் சமூக வலைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மாறி மாறி கடிதம் எழுதி இருந்த நிலையில், ராஜேந்திரகுமார் வெட்டி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொலைகளுக்கு முற்றுப்புள்ளி தேவை
ரியல் எஸ்டேட் பணப்பிரச்னையில், ராஜேந்திரகுமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் 2 ரவுடி கும்பலுக்கும் இடையே சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இடப்பிரச்னையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகப்பகுதியாக இருந்தாலும், கைது செய்யப்பட்ட ஒருவரைத் தவிர மற்ற 5 பேரும் புதுச்சேரியில் வசிக்கும் நபர்களாகவே உள்ளனர்.
இந்த வழக்கை ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தினாலும், குற்ற சம்பவங்களின் உண்மைத் தன்மை குறித்து தமிழக போலீசாருடன், புதுச்சேரி போலீசார் கைகோர்த்து செயல்பட வேண்டும். அப்போது தான் முழுமையான உண்மைத் தன்மை வெளி வருவதற்கும், அடுத்தக்கட்ட குற்ற சம்பவங்களைத் தடுக்கவும் முடியும்.
மேலும்
-
ஊர்வலத்துக்கு தடை உட்பட 10 நிபந்தனைகள்; நவம்பர் 1ல் 'இண்டி' கூட்டணி போராட்டத்துக்கு அனுமதி
-
அவசர காலத்தில் மருத்துவ செலவுக்கு உதவிய ‘தினமலர்’ நாளிதழுக்கு நன்றி: ரைஸ் மில் தொழிலாளி நெகிழ்ச்சி
-
டி.வி.நல்லுார் அருகே சிறுமியை கடத்த முயற்சி? வடமாநில வாலிபர் போலீசில் ஒப்படைப்பு
-
ஒடும் பஸ்சில் 12 சவரன் கொள்ளை மூதாட்டியிடம் மர்ம நபர்கள் கைவரிசை
-
கஞ்சா விற்ற வாலிபர் கைது
-
வெள்ளாடுகள் திருட்டு போலீஸ் விசாரணை