ஊர்வலத்துக்கு தடை உட்பட 10 நிபந்தனைகள்; நவம்பர் 1ல் 'இண்டி' கூட்டணி போராட்டத்துக்கு அனுமதி

2

புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டதை கண்டித்து டில்லி ராம்லீலா மைதானத்தில், 'இண்டி' கூட்டணி நவம்பர் 1ல் நடத்தவுள்ள போராட்டத்துக்கு, 10 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டதை கண்டித்தும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் இண்டி கூட்டணி நவ.,1ல் டில்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து உள்ளது.

இதில் நாடு முழுதும் இருந்து 10 லட்சம் பேரை பங்கேற்க செய்ய காங்கிரஸ் இலக்கு நிர்ண யித்துள்ளது. இந்த போராட்டத்துக்கு டில்லி போலீசார் 10 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர் .

இதன்படி நவ., 1ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை போராட்டம் நடத்தலாம். குறிப்பிட்ட நேரத்துக்குள் நிறைவு செய்யவேண்டும். போராட்டத்தில் பங்கேற்போர் ராம்லீலா மைதானத்தில் இரவில் தங்கக்கூடாது.

ஊர்வலமாக செல்லக்கூடாது. வாகனங்களை போக்குவரத்து போலீசார் ஒதுக்கியுள்ள இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்.

போராட்டம் நடக்கும் மைதான நுழைவுவாயில்கள், மேடை உள்ளிட்ட முக்கிய இடங்களில் உயர் தொழில்நுட்ப 'சிசிடிவி' க்கள் பொருத்தப்பட வேண்டும்.

கூட்டத்தை நிர்வகிக்க, சீருடை அணிந்த தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து கட்சி பொதுச் செயலர் வேணுகோபால், பொருளாளர் அஜய் மாக்கன் ஆகியோர் கடந்த 24ல் டில்லியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

Advertisement