மூங்கில்துறைப்பட்டு அருகே டிரைவர் கொலை வழக்கில் 5 பேர் கைது: சொத்துக்காக தம்பியே கொலை செய்தது அம்பலம்

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ரமேஷ், 45; ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு தார்பாய் சுற்றப்பட்ட நிலையில் ரங்கப்பனுார் அடுத்த குறவன் பாதையில் கிணற்றில் இருந்து கிடந்தார்.

வடபொன்பரப்பி போலீசார், தீயணைப்பு நிலையத்தினருடன் சம்பவ இடத்திற்குச் சென்று கிணற்றில் இருந்த நீரை இறைத்து உடலை மீட்டனர்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து ரமேஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம், கொலை செய்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர்.

அதில், ரமேஷ் பெயரில் இரண்டரை சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அபகரிக்க அவரது தம்பி ஆனந்தன், 40; திட்டம் தீட்டினார். இதற்காக ரமேைஷ கொலை செய்ய தீர்மானித்தார். அதற்காக புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர்களான தேவேந்திரன் மகன் பன்னீர்செல்வம், 46; தண்டபாணி மகன் சண்முகம், 40; சுப்ரமணி மகன் சக்கரவர்த்தி, 42; மரூர் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் ஆறுமுகம், 46; ஆகியோருக்கு மது வாங்கிக் கொடுத்து தனது மனைவி பரமேஸ்வரியுடன், 29; சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பரமேஸ்வரி உட்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து, தலைமறைவான ஆனந்தனை தேடி வருகின்றனர்.

Advertisement