ஓடைகள் சீரானால் பாதிப்புகள் குறையும்

திருப்பூர்: வானம் இருண்டாலே வெள்ளம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் வாழும் தாழ்வான பகுதிக் குடியிருப்புவாசிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஓடைகளைத் துார்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இயந்திரங்களின் உதவியுடன் நடைபெறும் இப்பணிகள், மழைநீர் தடையின்றி வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுவதைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றன.

செட்டிபாளையம் ஓடை, நல்லாறு ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை, சபரி ஓடை, செந்தில் ஓடை, புதுநகர் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 10.89 கி.மீ. நீளத்துக்குத் துார்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைநீர் தேங்கும் வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளிலும், ஓடைகளின் கரையோரக் குடியிருப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பருவமழை தீவிரமடைவதற்கு முன்பே நீர்வழித்தடங்களைச் சீரமைத்து, மழைநீர் சீராக வெளியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக மாநகராட்சி கமிஷனர் அமித் தெரிவித்துள்ளார்.

மழை பெய்வது இயற்கை; மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்குவது தவிர்க்கப்பட வேண்டிய பாதிப்பு. எனவே, துார்வாரும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணிப்பதுடன், அகற்றப்படும் கழிவுகள் மீண்டும் நீர்வழித்தடங்களை அடைக்காமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் புகார்கள் எழுந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, மழைக்கு முன்பே பாதிப்புக்குள்ளாகும் இடங்களைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்தது. முன்னெச்சரிக்கைப் பணிகளின் உண்மையான பயன், கனமழையின்போதும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகாமல் மக்கள் பாதுகாப்பாக இருப்பதில்தான் வெளிப்படும்.

Advertisement