ராஜினாமா எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ராஜினாமா செய்த ஆறு அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களிடம், தேர்தல் செலவை வசூலிக்க கோரிய வழக்கில், 1 லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொறடா உத்தரவை மீறி, த.வெ.க., அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம்- சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயகுமார், கரூர்- எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

விராலிமலை -சி.விஜயபாஸ்கர் ஆகியோர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்; த.வெ.க.,வில் இணைந்தனர்.

இந்நிலையில், ராஜினாமா செய்த ஆறு எம்.எல்.ஏ.,க்களிடம் தேர்தல் செலவை வசூலிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.காசி ராமலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்வதாக தெரிவித்தது.

இருப்பினும், மனுதாரர் தரப்பில் தொடர்ந்து வாதங்கள் முன் வைக்கப்பட்டதால், 1 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அபராதம் விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி, வழக்கறிஞர் காசி ராமலிங்கம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தொழில்நுட்ப பிரச்னை காரணமாக, தவறு நடந்து உள்ளதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை மட்டும் ரத்து செய்தனர்.

Advertisement